கிணற்றை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 8 பேர் பலி; ம.பி.,யில் சோகம்
கிணற்றை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 8 பேர் பலி; ம.பி.,யில் சோகம்
ADDED : ஏப் 04, 2025 07:01 AM

கந்த்வா: மத்திய பிரதேசத்தில் கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 8 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கந்த்வா மாவட்டத்தின் சாய்கான் மஹான் பகுதியில் காங்கோர் பண்டிகையை கொண்டாட அக்கிராம மக்கள் ஆயத்தமாகி வந்தனர். இதன் ஒரு பகுதியாக, சுவாமி சிலைகளை நீரில் கரைப்பதற்காக, அங்குள்ள 150 ஆண்டு கால பழமையான கிணற்றை சுத்தப்படுத்தும் பணியில் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.
முதலில் கிணற்றுக்குள் இறங்கிய நபர் விஷ வாயு தாக்கி மயக்கமடைந்த நிலையில், அவரை மீட்கும் முயற்சியில், ஒன்றன் பின் ஒன்றாக 7 பேர் உள்ளே சென்றனர். ஆனால், விஷவாயு தாக்கியதில், 8 பேரும் கிணற்றின் உள்ளேயே உயிரிழந்தனர்.
ராகேஷ் படேல்,23, அனில் படேல்,25, அஜய் படேல்,24, ஷரன் படேல்,35, வாசுதேவ் படேல்,40, கஜனன் படேல்,35, அர்ஜூன் படேல்,35, மோகன் படேல்,53, ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்தது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.