மல்யுத்த வீரர் குத்தி கொலை 2 சிறுவர் உட்பட 8 பேர் கைது
மல்யுத்த வீரர் குத்தி கொலை 2 சிறுவர் உட்பட 8 பேர் கைது
ADDED : ஜன 21, 2025 07:18 AM

பெலகாவி: ரீல்ஸ் செய்வதில் ஏற்பட்ட மோதலில், மல்யுத்த வீரர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இரு சிறுவர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
பெலகாவி மாவட்டம், கோகாக்கின் கோவலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ் ஈரட்டி, 26, ரவீசந்திர பட்ரோட், 25. நண்பர்கள். இருவரும் அடிக்கடி ரீல்ஸ் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ரீல்ஸ் செய்வதில் பிரகாஷுக்கும், ரவீசந்திர பட்ரோடுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ரவீந்திரன் இல்லாமல், பிரகாஷ் மட்டும் ரீல்ஸ் எடுத்துள்ளார்.
இதனால் ரவீந்திரன் கோபம் அடைந்தார். அவரை கொலை செய்ய, தன் மற்ற நண்பர்களுடன் திட்டம் போட்டார்.
ஜன., 14ம் தேதி ஹூலிகட்டி கிராமத்தில் நடந்த சிவலிங்கேஸ்வரா திருவிழாவில் பங்கேற்று விட்டு, தன் கிராமத்திற்கு பிரகாஷ் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த ஆறு பேர் சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டனர். இக்கொலையை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், பிரகாஷ் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து பெலகாவி எஸ்.பி., டாக்டர் பீமாஷங்கர் குலாட் நேற்று கூறுகையில், “பிரகாஷ் கொலையில் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ரவீந்திரன் பட்ரோட், உமேஷ் கம்பர், மாருதி வட்டர், அபிஷேக் பட்ரோட், விஜய்குமார் நாயக் மற்றும் பிரகாஷின் நடமாட்டத்தை கண்காணித்து கூறிய இரு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்றார்.
கோகாக் ரூரல் போலீசார்விசாரிக்கின்றனர்.

