பாம்பு இறந்து கிடந்த குடிநீர் தொட்டியால் 8 பேர் பாதிப்பு
பாம்பு இறந்து கிடந்த குடிநீர் தொட்டியால் 8 பேர் பாதிப்பு
ADDED : ஜன 14, 2025 06:41 AM

உத்தர கன்னடா: பாம்பு இறந்து கிடந்த குடிநீர்த் தொட்டித் தண்ணீரை குடித்த எட்டு பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உத்தர கன்னடா, எல்லாபூர் தாலுகாவில் டோமகேரி கிராமம் உள்ளது. இதில் கவுலிவாடா எனும் பகுதியில் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீருக்காக, ஊரில் உள்ள குடிநீர்த் தொட்டியையே பயன்படுத்துகின்றனர்.
நேற்று முன்தினம், இந்த தொட்டியில் உள்ள தண்ணீரை குடித்த பலருக்கும் வாந்தி, பேதி, தலைவலி ஏற்பட்டது. எட்டு பேர் மயக்கம் அடைந்தனர். இவர்கள் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், கிராமத்தில் பதற்றம் நிலவியது.
தகவல் அறிந்து வந்த சுகாதார துறையினர், அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்பகுதியினரிடம் தகவல்களை கேட்டு அறிந்தனர்.
தண்ணீரை மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பினர். தண்ணீரில் ஒரு வித துர்நாற்றம் வீசுவதை அறிந்தனர். குடிநீர் தொட்டியை ஆய்வு செய்யுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
குடிநீர் தொட்டிக்குள் பாம்பு ஒன்று இறந்து கிடப்பது தெரிந்தது. அதனால் தான் வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்பட்டு பலரும் பாதித்தது தெரிய வந்தது. அந்த பாம்பு தொட்டியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது; தொட்டியும் சுத்தம் செய்யப்பட்டது.

