ADDED : ஆக 17, 2025 10:03 PM
புதுடில்லி:கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இஸ்கான் கோவிலில் பாதுகாப்புப் பணியில் ஏற்பட்டு இருந்த குறைபாடுகளை அடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-- இன்ஸ்பெக்டர் உட்பட எட்டு போலீசாரை, 'சஸ்பெண்ட்' செய்து டில்லி மாநகரப் போலீஸ் கமிஷனர் எஸ்.பி.கே. சிங் உத்தரவிட்டார்.
கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
புதுடில்லி இஸ்கான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். டில்லி மாநகரப் போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பாதுகாப்பு ஏற்பாடுகளை, டில்லி மாநகரப் போலீஸ் கமிஷனர் எஸ்.பி.கே.சிங் ஆய்வு செய்தார். இஸ்கான் கோவில் வளாகத்தின் முக்கிய இடத்தில், போலீஸ் யாருமே இல்லை.
இதையடுத்து, கடமை தவறியதற்காக இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர் உட்பட, எட்டு போலீசாரை, சஸ்பெண்ட் செய்து, நடவடிக்கை எடுக்க கமிஷனர் சிங் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக, இஸ்கான் கோவில் அமைந்துள்ள ஷாபாத் டெய்ரி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கும் கடும் எச்சரிக்கை விடுத்தார்.