'ஆன்லைன்' பெண் தோழியரிடம் ரூ.9 கோடியை இழந்த 80 வயது முதியவர்
'ஆன்லைன்' பெண் தோழியரிடம் ரூ.9 கோடியை இழந்த 80 வயது முதியவர்
ADDED : ஆக 09, 2025 12:53 AM

மும்பை : சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து நண்பர்களான பெண்களின் மோசடி வலையில் சிக்கி, 9 கோடி ரூபாயை இழந்த மும்பையைச் சேர்ந்த 80 வயது முதியவர், மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த மும்பையை சேர்ந்த 80 வயது முதியவருக்கு, 'பேஸ்புக்' தளம் வாயிலாக ஷார்வி என்ற பெண், 2023ல் அறிமுகமானார்.
'வாட்ஸாப்' முதலில் நண்பர்களாக பேசி வந்த இருவரும், 'வாட்ஸாப்' அரட்டைக்கு முன்னேறினர்.
கணவரை பிரிந்து தனியாக வசித்து வருவதாக ஷார்வி கூறினார்.
ஒரு கட்டத்தில், குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் சேர்க்க பணம் வேண்டும் என பல்வேறு காரணங்களை கூறிய ஷார்வி, முதியவரிடம் அடிக்கடி பணம் கறந்து உள்ளார்.
அடுத்த சில நாட்களில், கவிதா என்ற பெண் முதியவரை, 'வாட்ஸாப்' வாயிலாக தொடர்பு கொண்டார். ஷார்வியின் தோழி எனக் கூறிய அவர், முதியவருக்கு ஆபாச படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பி, அவ்வப்போது பணம் கேட்டார்.
அவருக்கும், இல்லை என்று சொல்லாமல் பணத்தை வாரி வழங்கினார் முதியவர்.
அதே ஆண்டு, டிசம்பரில், ஷார்வியின் சகோதரி எனக் கூறிக்கொண்டு, டினாஸ் என்ற பெண் முதியவரின் வாட்ஸாப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.
ஷார்வியுடன், முதியவர் பேசிய உரையாடல் தொடர்பான ஆதாரங்களையும் அவர் அனுப்பி வைத்தார். பின், ஷார்வி இறந்துவிட்டதாகவும், தன் மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என டினாஸ் கேட்க, அவருக்கும் இவர் பணம் அனுப்பினார்.
அடுத்து, டினாசின் தோழி எனக்கூறிய ஜாஸ்மின் என்ற பெண்ணும், முதியவரிடம் பழகி பணம் பறித்துள்ளார்.
தற்கொலை ஒரு கட்டத்தில், தன் சேமிப்பு அனைத்தும் தீர்ந்துவிட, டினாசிடம் கொடுத்த பணத்தை முதியவர் திருப்பிக் கேட்டார்.
பணம் தர மறுத்ததுடன், தொடர்ந்து கேட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என, டினாஸ் மிரட்டல் விடுத்தார். கூடுதலாக பணம் தரும்படியும் வற்புறுத்தினார்.
ஒரு கட்டத்தில், முதியவர் தன் மருமகளிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அடுத்ததாக, தன் மகனிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டபோது, முதியவரின் பணத்தேவை குறித்து அவர் விசாரித்தார்.
முடிவில், தன் தந்தை ஏமாற்றப்பட்டதை அறிந்து போலீசில் புகாரளித்தார்.
அவர்கள் நடத்திய விசாரணையில், 2023, ஏப்., முதல் 2025, ஜன., வரை, 734 பரிவர்த்தனைகள் வாயிலாக, 9 கோடி ரூபாயை முதியவர் இழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே, உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளாக நடந்த மோசடி குறித்து மும்பை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவரை பல்வேறு பெண்களின் பெயரில், ஒருவரே ஏமாற்றி இருக்கலாம் என சந்தேகித்த போலீசார், மோசடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.