UPDATED : அக் 15, 2026 12:00 AM
ADDED : அக் 14, 2026 03:14 PM

முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில், 80 வயது அர்ச்சகரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த இரண்டு பேரை போலீசார் தேடுகின்றனர்.
உ.பி., மாநிலம், முசாபர்நகர் மாவட்டம், போரகலா கிராமத்தை சேர்ந்தவர் தேவானந்த சுவாமி, 80. அதே கிராமத்தில் உள்ள கோவிலில் அர்ச்சகராக வேலை செய்தார். நேற்று முன் தினம் மாலை, ஒரே பைக்கில் வந்த இருவர், தேவானந்தா மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தேவானந்தா, அதே இடத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சஹரன்பூர் டி.ஐ.ஜி., அபிஷேக் சிங் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அர்ச்சகர் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போரகலா கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
