3வது சர்வதேச விமான நிலையம் கட்ட திட்டம் துமகூரில் 8,000 ஏக்கர் நிலம் அடையாளம்
3வது சர்வதேச விமான நிலையம் கட்ட திட்டம் துமகூரில் 8,000 ஏக்கர் நிலம் அடையாளம்
ADDED : ஜன 07, 2024 02:42 AM
பெங்களூரு : கர்நாடகாவில், மூன்றாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக, துமகூரில் 8,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கர்நாடகாவைப் பொறுத்தவரையில், பெங்களூரின் தேவனஹள்ளி, தட்சிண கன்னடாவின் மங்களூரு என, இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், அதிக எண்ணிக்கையில் விமானங்கள் வந்து, செல்கின்றன.
கடந்த 2022 டிசம்பரில் தான், இரண்டாவது முனையத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சில மாதங்களுக்கு முன்பு, பயன்பாட்டுக்கு வந்தது.
முதல் முனையத்தில் ஆண்டுக்கு, 2.5 கோடி பயணியர் பயன்படுத்துகின்றனர். இரண்டாவது முனையத்தில் ஆண்டுக்கு 2 கோடி பயணியர் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், புதுடில்லி, மும்பை நகரங்களுக்கு பின், நாட்டின் மூன்றாவது பரபரப்பு மிகுந்த விமான நிலையமாக, பெங்களூரு செயல்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில், விமானங்களில் செல்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு அழுத்தத்தை குறைக்க, மற்றொரு சர்வதேச விமான நிலையம் கட்ட, 2017லிலேயே அரசு திட்டமிட்டது.
அதன் பின் வந்த அரசுகளும், அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொண்டன. தற்போது, துமகூரு, மதுகிரி, கொரட்டகரே மற்றும் சிராவின் மத்திய பகுதியில் உள்ள, தேசிய நெடுஞ்சாலை - 48ல், 8,000 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
நிலத்தை கையகப்படுத்த, கர்நாடக தொழில் பாதுகாப்பு வளர்ச்சி ஆணையத்திடம், ஆவணங்கள் சமர்ப்பித்து, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி, மும்பை, கோல்கட்டா ஆகிய நகரங்களில் தலா இரண்டு விமான நிலையங்கள் உள்ளதால், பெங்களூரிலும் மற்றொரு விமான நிலையம் தேவை. மத்திய விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தல் பேரில், நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த இடத்தை, இரண்டு நாட்களுக்கு முன்பு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார். கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து, துமகூரு 87 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது.
பல்வேறு திட்டப் பணிகள் துவக்கி வைப்பதற்காக, வரும் 29ம் தேதி, முதல்வர் சித்தராமையா, துமகூரு வருகிறார். அன்றைய தினம், விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.