தமிழகத்துக்கு தினமும் 8,000 கன அடி! திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் : அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் சித்தராமையா தகவல்
தமிழகத்துக்கு தினமும் 8,000 கன அடி! திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் : அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் சித்தராமையா தகவல்
ADDED : ஜூலை 15, 2024 12:49 AM

பெங்களூரு ''தமிழகத்துக்கு தினமும் 1 டி.எம்.சி., காவிரி நீர் திறக்க முடியாது. வினாடிக்கு 8,000 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவை எதிர்த்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்படும்,'' என, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய காவிரி நீர் குறித்து, மூன்று நாட்களுக்கு முன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக காவிரி நீர் முறைப்படுத்தும் குழு டில்லியில் ஆலோசனை நடத்தியது.
அப்போது, தமிழகம் சார்பில், நிலுவையில் உள்ள பாக்கி நீரை வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இதைஅடுத்து, கடந்த 12ம் தேதி முதல், இம்மாதம் இறுதி வரை தினமும் 1 டி.எம்.சி., காவிரி நீர் திறக்கும்படி, குழு தலைவர் வினித் குப்தா, கர்நாடகாவுக்கு உத்தரவிட்டார்.
திறக்க மறுப்பு
இதையடுத்து, 12ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்ப்பாசன துறை அதிகாரிகளுடன், அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதற்கு மறுப்பு தெரிவித்து முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவது தொடர்பாக, பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், நேற்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இதில், துணை முதல்வரும், நீர்ப்பாசன துறை அமைச்சருமான சிவகுமார், பா.ஜ.,வை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஜி.டி.தேவகவுடா, மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் உட்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை சேர்ந்த மக்கள் பிரதி நிதிகள் பங்கேற்றனர்.
மேலும், மாநில தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயல், நீர்ப்பாசன துறை கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா, அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா சார்பில் வாதாடும் வழக்கறிஞர் மோகன் கத்தரகி உட்பட பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
3 மணி நேரம்
தொடர்ந்து, மூன்று மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின், முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவின்படி, தமிழகத்துக்கு தினமும் 1 டி.எம்.சி., நீர் திறந்து விட முடியாது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி அணைகளில் உள்ள நீர் இருப்பை கவனத்தில் கொண்டு, தினமும் வினாடிக்கு 8,000 கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்படும்.
மேலும், 1 டி.எம்.சி., நீரை திறக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்து, சட்ட போராட்டம் நடத்துவோம்.
ஏற்கனவே, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 16,750 கன அடி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது. அதுவும் கபினி அணை நிரம்பும் நிலையில் இருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் தான் வழங்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால், திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும். போதிய மழை பெய்யாத சூழலில், நீரில் அளவு குறைக்கப்படும்.
ஜூன், ஜூலை இரண்டு மாதங்களுக்கு தமிழகத்துக்கு, 40.43 டி.எம்.சி., நீர் தர வேண்டும். ஆனால், ஜூன் முதல், தற்போது வரை, 5 டி.எம்.சி., நீர் கூடுதலாகவே வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளின் நான்கு அணைகளிலும் சேர்த்து, 63 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சர்கள் குமாரசாமி, பிரஹலாத் ஜோஷி, நிர்மலா சீதாராமன், ஷோபா, சோமண்ணா ஆகியோர், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

