ADDED : பிப் 19, 2026 01:23 AM

- - டில்லி சிறப்பு நிருபர் -
டில்லியில், 15 நாட்களில், 807 பேர் காணாமல் போனது தொடர்பாக, மத்திய - மாநில அரசுகள், டில்லி போலீஸ் பதிலளிக்கும்படி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 1- - 15 வரை, தலைநகர் டில்லியில், 807 பேர் காணாமல் போனதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில், 509 பேர் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள். இது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் ஜெய்தா தேப் சர்க்கார் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், 'இது குறித்து விசாரணை நடத்தி, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும். போலீஸ் தரவுகளின்படி, சராசரியாக நாளொன்றுக்கு, 54 பேர் டில்லியில் காணாமல் போகின்றனர். இது தீவிரமான பிரச்னை' என, குறிப்பிட்டிருந்தார்.
இதை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா தலைமையிலான அமர்வு, இதுகுறித்து அடுத்த நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, டில்லி அரசு, மத்திய அரசு, டில்லி போலீஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

