'முடா'வின் 812 மனைகள் அமலாக்க துறையால் முடக்கம்! முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அதிரடி
'முடா'வின் 812 மனைகள் அமலாக்க துறையால் முடக்கம்! முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அதிரடி
ADDED : பிப் 05, 2025 09:41 PM
பெங்களூரு ; 'முடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் 160 மனைகளை ஏற்கனவே முடக்கி வைத்துள்ள அமலாக்கத் துறை, தற்போது சட்டவிரோதமாக விற்கப்பட்ட 812 மனைகளை முடக்க தயாராகிறது. 'இந்த மனைகளை யாருடைய பெயருக்கும் பதிவு செய்யக் கூடாது' என, மைசூரின் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் அவசர கடிதம் எழுதியுள்ளது.
'முடா'வில் மனைகள் விற்றதில், பெருமளவில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, சட்டவிரோதமாக 14 மனைகள் வழங்கப்பட்டதாக, சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா, லோக் ஆயுக்தாவிலும், அமலாக்கத் துறையிலும் புகார் அளித்திருந்தார்.
இரண்டு விசாரணை அமைப்புகளும், தீவிர விசாரணை நடத்துகின்றன.
முதல்வரின் நாற்காலியை ஆட்டம் காண வைக்கும் முடா முறைகேட்டில், பலரின் பெயர்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
ஆயிரக்கணக்கான மனைகள் சட்டவிரோதமாக விற்கப்பட்டதை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.
'முடா' முன்னாள் கமிஷனர் நடேஷ் பதவி காலத்தில், மனை வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது. 2023 மார்ச் 8ம் தேதி, ஒரே நாளில் அப்துல் வாஹித் என்பவரின் பெயரில் 28 மனைகள் பதிவாகியுள்ளன.
அதே ஆண்டு செப்டம்பர் 1ல், அப்துல் வாஹித் பெயரிலேயே, விஜயநகர், ஜெ.பி.நகர், நாச்சனஹள்ளி பாளையாவில் 13 மனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த, 2023 செப்டம்பர் 11ல், ரவி பெயரில் 31 மனைகள் பதிவாகியுள்ளன.
மைசூரு நகரின் இதய பகுதியில் உள்ள குவெம்பு நகரில் 12 மனைகள், தட்டகள்ளி, விஜயநகரில் 19 மனைகளும் இவரது பெயரில் பதிவாகியுள்ளன.
இதுபோன்று, முறைகேடாக ஒதுக்கப்பட்ட 812 மனைகளை முடக்க அமலாக்க துறை தயாராகி வருகிறது. இந்த மனைகளை யாருடைய பெயருக்கும் மாற்றவோ, பதிவு செய்யவோ கூடாது என, மைசூரின் அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களுக்கும், அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில், அந்த மனைகளின் சர்வே எண்களையும் குறிப்பிட்டுள்ளது.
காங்கிரசார் மட்டுமின்றி, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களும் கூட, முடாவில் மனைகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக் ஆயுக்தா மேலோட்டமாக விசாரணை நடத்தி, முதல்வர் சித்தராமையாவை குற்றமற்றவராக காட்டும் வகையில் அறிக்கை தயாரிப்பதாக, சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா குற்றம்சாட்டி இருந்தார்.
ஆனால், அமலாக்கத் துறை ஆழமாக உள்ளே இறங்கி விசாரணை நடத்துகிறது.
முடாவின் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது. ரவி பெயரில், 31 மனைகள், அப்துல் வாஹித் பெயரில் 41, கேதட்ரல் சொசைட்டி பெயரில் பதிவான 40 மனைகள் உட்பட 812 மனைகள் விற்கப்பட்டதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. இவை பினாமி சொத்துகளாக இருக்கலாம் என, அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது.
சட்டவிரோதமாக விற்கப்பட்ட 160 மனைகளை அமலாக்கத் துறை ஏற்கனவே முடக்கியுள்ளது.
மனைகளின் தகவல்களை துணை பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பிய அமலாக்கத் துறை, மனைகளை யாருடைய பெயரிலும் பதிவு செய்ய வேண்டாம் என, அறிவுறுத்தி இருந்தது.
செல்வாக்கு மிக்க தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரும் பினாமி பெயரில், முடாவில் குறைந்த விலைக்கு மனைகள் பெற்றுள்ளனர்.
இவற்றை விற்பனை செய்து, கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளனர். இதை அமலாக்கத் துறை கண்டுபிடித்து, 812 மனைகளை முடக்க உள்ளது. இதனால், மனை உரிமையாளர்கள் நடுக்கத்தில் உள்ளனர்.