நிலுவையா... இழுவையா..: உச்சநீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்குது 83 ஆயிரம் வழக்குகள்
நிலுவையா... இழுவையா..: உச்சநீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்குது 83 ஆயிரம் வழக்குகள்
ADDED : ஆக 30, 2024 12:55 PM

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 83 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது 10 ஆண்டுகளில் அதிகம் எனவும், இக்காலகட்டத்தில் 8 மடங்கு அதிகரித்து உள்ளதும் தெரியவந்துள்ளது.
2009 ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 26 ல் இருந்து 31 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் பிறகு, 2013ம் ஆண்டு நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தில் இருந்து 66 ஆயிரமாக அதிகரித்தது.
பிறகு 2014 ம் ஆண்டில் சதாசிவம், ஆர்எம் லோதா ஆகியோர் தலைமை நீதிபதிகளாக இருந்த போது நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 63 ஆயிரமாகவும் குறைய, அடுத்த ஆண்டு 59 ஆயிரமாக குறைந்தது. அப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் எச்எல் தத்து.
ஆனால், அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 63 ஆயிரமாக உயர்ந்தது. பிறகு தலைமை நீதிபதியாக வந்த ஜேஎஸ் கேஹர், வழக்கு நிர்வாக அமைப்பில் தொழில்நுட்பத்தை புகுத்தினார். இதன் காரணமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 56 ஆயிரமாக குறைந்தது. ஆனால், 2018 ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 57 ஆயிரமாக அதிகரித்தது.
2019ம் ஆண்டு தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் முயற்சியால், 2019ம் ஆண்டு மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. அதேபோல் வழக்குகளின் எண்ணிக்கையும் 60 ஆயிரமாக அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிய கோவிட் காரணமாக நீதித்துறையும் பாதிக்கப்பட்டது. வழக்குகளின் எண்ணிக்கையும் 65 ஆயிரமாக உயர்ந்தது. கோவிட் தாக்கம் நீட்டித்து வந்ததால், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2021ம் ஆண்டு 70 ஆயிரமாகவும், 2022ம் ஆண்டு 79 ஆயிரமாகவும் அதிகரித்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்ததே தவிர குறையவில்லை.
இன்றைய நிலையில் 82, 831 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 33 சதவீதம் 27,604 வழக்குகள் ஓராண்டுக்கு முன்பும், 38,995 வழக்குகள் இந்தாண்டும் தொடரப்பட்டவை. அதேநேரத்தில் 37,158 வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் தீர்வு கண்டுள்ளது.
உயர்நீதிமன்றங்களில்
உயர்நீதிமன்றங்களில் கடந்த 2014ம் ஆண்டு 41 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதன் பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்து வந்து கடந்த ஆண்டு 61 லட்சமாகவும், இந்தாண்டு 59 லட்சமாகவும் உள்ளது.
விசாரணை நீதிமன்றங்கள்
விசாரணை நீதிமன்றங்களில் 2014ல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2.6 கோடியாக இருந்தது. தற்போது 4.5 கோடியாக உள்ளது.