துங்கபத்ராவில் 83,000 கன அடி நீர் திறப்பு 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்
துங்கபத்ராவில் 83,000 கன அடி நீர் திறப்பு 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்
ADDED : அக் 13, 2024 11:15 PM

கொப்பால்: கொப்பாலில் பெய்து வரும் கனமழையால் துங்கபத்ரா அணை நிரம்பியது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 83,148 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், நான்கு மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கொப்பால் - விஜயநகரா மாவட்ட எல்லையில் முனிராபாத்தில் துங்கபத்ரா அணை உள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அணை முழுமையாக நிரம்பியது. அணையின் 19வது மதகின் ஷட்டர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால், புதிய ஷட்டரும் பொருத்தப்பட்டது.
ஆயினும், அதற்குள் அணையில் இருந்து 35 டி.எம்.சி., தண்ணீர் வெளியேறியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். ஆனாலும் பின் பெய்த கனமழையால், அணை மீண்டும் நிரம்பியது. அணையில் இருந்து பாசனத்திற்காக, கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மீண்டும், கொப்பாலில் கனமழை பெய்கிறது. அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்தது. மொத்தம் 497.71 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட, அணை நீர்மட்டம் நேற்று 497.40 டி.எம்.சி.,யாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 84,504 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 83,148 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் துங்கபத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கொப்பால், விஜயநகரா, பல்லாரி, ராய்ச்சூர் மாவட்டங்களில், துங்கபத்ரா ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, மாவட்ட நிர்வாகங்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளன.
கொப்பாலின் கங்காவதியில் உள்ள விருப்பபுரகட்டே - நவவிருத்தவனகட்டே கிராமங்களை இணைக்கும், தரைப்பாலம் மூழ்கி உள்ளது. ஆனேகுந்தியில் சில கோவில்கள், புராதன மண்டபங்கள் மூழ்கின. கனமழையால் கொப்பால் தாலுகா கிண்ணா கிராமத்தில் உள்ள, ஹிரேஹல்லா ஏரியும் நிரம்பியது.
ஏரிக்கரை உடைந்ததால் விவசாய நிலங்களில், தண்ணீர் புகுந்தது நெற்பயிர்கள் மூழ்கின. விஜயநகராவின் மாதபுரா கிராமத்தில், மாதபுரா ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் வீடுகளை சூழ்ந்தது.