மஹா.,வில் ஆளுக்கு 85 தொகுதி: காங்., கூட்டணியில் 3 கட்சியும் முடிவு!
மஹா.,வில் ஆளுக்கு 85 தொகுதி: காங்., கூட்டணியில் 3 கட்சியும் முடிவு!
ADDED : அக் 23, 2024 08:05 PM

மும்பை: மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் இருக்கும் மூன்று கட்சிகளும் தலா 85 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக சிவசேனா உத்தவ் அணி தலைவர் சஞ்சய் ராவத் இன்று கூறினார்.
மஹாராஷ்டிராவில் வரும் நவ.20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக காங்., கூட்டணியில் நடந்த பேச்சு முடிவுக்கு வந்துள்ளது. மூன்று முக்கிய கட்சிகளும் தலா 85 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு மொத்தம் 288 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் ஆளுக்கு 85 தொகுதியில் போட்டியிடுவது என மஹா விகாஸ் அகாடி கூட்டணி பேச்சில் முடிவு செய்யப்பட்டது.
மீதமுள்ள தொகுதிகள், கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளான சமாஜ்வாதி, பி.டபுள்யு.பி, சிபிஐ(எம்), சிபிஐ, மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.
இதனிடையே சிவசேனா உத்தவ் அணி, முதற்கட்டமாக, 65 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆதித்யா தாக்கரே, மும்பையின் வோர்லி தொகுதியிலும் குடல் தொகுதியில் வைபவ் நாய்க், சவந்த்வாடி தொகுதியில் ராஜன் டெலியும், தானே- ராஜன் விசாரே, குஹாஹர்- பாஸ்கர் ஜாதவ், டோம்பிவிலி- திபேஷ் மாத்ரி, பந்த்ரா கிழக்கு- வருண் சர்தேசாய், விக்ரோலி- சுனில் ராவ்த் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.