'சைபர்' குற்றவாளிகளின் போலி வங்கி கணக்கு 8.50 லட்சம்!: நாடு முழுதும் 700 கிளைகளில் திறந்து மோசடி
'சைபர்' குற்றவாளிகளின் போலி வங்கி கணக்கு 8.50 லட்சம்!: நாடு முழுதும் 700 கிளைகளில் திறந்து மோசடி
ADDED : ஜூன் 27, 2025 01:19 AM

புதுடில்லி: 'சைபர்' மோசடிகள் வாயிலாக பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயை, நாடு முழுதும், 700 வங்கி கிளைகளில், 8.50 லட்சம், 'மியூல் அக்கவுன்ட்' எனப்படும், போலி வங்கிக் கணக்குகள் வாயிலாக, 'சைபர்' குற்றவாளிகள் பரிமாற்றம் செய்துள்ளது சி.பி.ஐ., விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பங்கள் பெருக பெருக, மோசடி செய்யும் முறைகளும் மாறி வருகின்றன. வீடு தேடி வந்து திருடிய கும்பல், இப்போது, ஓரிடத்தில் சொகுசாக அமர்ந்து கொண்டு, தங்கள் வலையமைப்பை விரிவுபடுத்தி, 'டிஜிட்டல்' குற்றங்களை அரங்கேற்றி வருகின்றன.
குறிப்பாக, மொபைல் போன், மடிக்கணினி போன்றவற்றின் உதவியுடன் அரங்கேறும் பணமோசடி உள்ளிட்ட குற்றங்கள் சைபர் குற்றங்களாக கருதப்படுகின்றன.
9 பேர் கைது
டிஜிட்டல் முறையில் ஒருவரை கைது செய்வதாக மிரட்டி, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என்ற பெயரில் சாமானியர்களை முதல் தொழிலதிபர்கள் வரை ஏமாற்றி பணம் சுருட்டுவது அதிகரித்துள்ளது.
இவ்வாறு ஆள்மாறாட்டம், டிஜிட்டல் திருட்டு, மோசடி முதலீடுகள், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளத்தில் அரங்கேற்றப்படும் மோசடி போன்றவை வாயிலாக பெறப்படும் ரூபாய், 'மியூல்' எனப்படும் போலி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகின்றன.
நிழல் கணக்கு, சட்டவிரோத கணக்கு என பல பெயர்களில் இந்த கணக்கு துவங்கப்படுவதே, பணமோசடியை குறிவைத்துதான் என ஆதாரங்கள் சொல்கின்றன.
அவ்வாறு துவங்கப்படும் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் பணம், உடனடியாகவே அடுத்தடுத்து பல்வேறு கிளை கணக்குகளுக்கு பிரித்து அனுப்பப்படுவதும் புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்பின், யாராலும் உபயோகப்படுத்த முடியாமல், அந்த கணக்குகள் கேட்பாரற்று கிடக்கின்றன. டிஜிட்டல் மோசடியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, சி.பி.ஐ., அமைப்பின் வாயிலாக இது தொடர்பான விசாரணையையும் முடுக்கிவிட்டுள்ளது.
நாடு முழுதும் அரங்கேறிய டிஜிட்டல் மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், ராஜஸ்தான், டில்லி, ஹரியானா, உத்தராகண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில், 42 இடங்களில் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் சாதனங்கள், மொபைல் போன்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு அனுப்பிய அதிகாரிகள், இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள், முகவர்கள், வங்கி ஊழியர்கள் என ஒன்பது பேரை கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், நாடு முழுதும், 700 வங்கி கிளைகளில் 8.50 லட்சம் மியூல் கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகம்
இதுகுறித்து சி.பி.ஐ., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டிஜிட்டல் மோசடியில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகள், முதலில் தனி நபர், தொழில் நிறுவனங்கள், சமூக அமைப்புகளின் வங்கி கணக்கு விபரங்களை, முன்னாள் மற்றும் தற்போது பணிபுரியும் வங்கி ஊழியர்கள் வாயிலாக தெரிந்து கொள்கின்றனர்.
அந்த வங்கி கணக்குகளுக்கு சொந்தக்காரர்களுக்கு தெரியாமலேயே அவர் பெயரில் போலி கணக்கு துவங்கி, ஏமாற்றி பெறப்படும் பணத்தை அந்த கணக்கில் பெறுகின்றனர். உடனடியாக அந்தப் பணம் பல்வேறு கிளை கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. அதன்பின் அந்த கணக்கு கேட்பாரற்ற கணக்காக மாறுகிறது.
அதனால், அந்த வங்கிக் கணக்கை வைத்து விசாரணை நடத்தினாலும் சைபர் குற்றவாளிகளை புலனாய்வு அமைப்புகளால் நெருங்க முடிவதில்லை. நாடு முழுதும் உள்ள பல்வேறு வங்கிகளின் 700க்கும் மேற்பட்ட கிளைகளில், 8.50 லட்சத்துக்கும் அதிகமான மியூல் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்த கணக்கை துவங்கும் போது, வாடிக்கையாளர் தொடர்பான கே.ஒய்.சி., விபரங்களை வங்கி நிர்வாகம் முறையாக பின்பற்றாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் உதவியுடனேயே இந்த சட்டவிரோத கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டது தொடர்பாக, சில கிளைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.