நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் இரு ரயில்கள் மோதி 88 தொழிலாளர்கள் காயம்
நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் இரு ரயில்கள் மோதி 88 தொழிலாளர்கள் காயம்
ADDED : ஜன 01, 2026 12:24 AM
டேராடூன்: உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் நடைபெறும் நீர்மின் திட்ட கட்டுமான பணியில் பயன்படுத்தப்படும் இரு ரயில்கள் மோதிய விபத்தில், 88 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தின் பிபல்கோடி பகுதியில் நீர்மின் திட்டம் கட்டுமானப்பணி நடக்கிறது. இதற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் துளையிடும் இயந்திரம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு, 109 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லோகோ ரயில் சென்றது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த ரயில் எதிரே வந்த ரயில் மீது மோதியது. இதில், 88 பேர் காயம் அடைந்தனர்.
இவர்களில், 70 பேர் கோபேஸ்வர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், 66 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மீதமுள்ள நான்கு பேர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். அவர்களை சமோலி கலெக்டர் கவுரவ் குமார் மற்றும் போலீஸ் எஸ்.பி., சுர்ஜித் சிங் பன்வார் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதற்கிடையே ரயில் விபத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது பயணியர் ரயில்களில் பயன்படுத்தும் பெட்டிகள் அல்ல; கட்டுமானத்துக்காக தனியார் இயக்கும் டிராலி வகை பெட்டிகள் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

