எல்லையில் பாக்., அத்துமீறல் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் பலி
எல்லையில் பாக்., அத்துமீறல் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் பலி
ADDED : மே 08, 2025 12:27 AM
ஸ்ரீநகர்: ஜம்மு -- காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில், பாக்., ராணுவம் அத்துமீறி பீரங்கி தாக்குதல் நடத்தியதில், அப்பாவி பொதுமக்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்; 41 பேர் காயமடைந்தனர்.
நேற்று அதிகாலையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாக்., மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களில் நம் படையினர் துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், ஏராளமான பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டன. இதனால், ஆத்திரமடைந்த பாக்., ராணுவத்தினர், நேற்று எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள கிராமங்களில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பீரங்கிகளால் சுட்டனர்.
இதையடுத்து, பாக்., ராணுவத்துக்கு நம் ராணுவத்தினர் மிகக் கடுமையாக பதிலடி கொடுத்தனர். கனரக பீரங்கிகளைக் கொண்டு, பாக்., ராணுவ நிலைகளை நோக்கி நம் ராணுவத்தினர் சுட்டனர். இதனால், பாக்., ராணுவத்தினர் முகாமிட்டிருந்த ஏராளமான ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டன. இந்த சண்டையில், பாக்., ராணுவ தரப்பில் சிலர் கொல்லப்பட்டதாக நம் ராணுவத்தினர் தெரிவித்தனர்.
பாக்., ராணுவம் தாக்குதலை துவங்கியதும், பதுங்கு குழிகளுக்கு செல்லும்படி எல்லையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சற்று தள்ளியுள்ள கிராமங்களுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டது. எனினும், ஜம்மு - -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லையோர பகுதிகளான பாலகோட், மெந்தர், மேன்கோட், கிருஷ்ண காடி, குல்புர், கெர்னி ஆகிய இடங்களில் கனரக பீரங்கிகளைக் கொண்டு பாக். ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் சிறுவர்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர்; 28 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதுபோல எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள பாரமுல்லா மாவட்டத்தின் உரி, குப்வாரா மாவட்டத்தின் கர்னா, ரஜோரி மாவட்டம் ஆகியவற்றிலும் பீரங்கி தாக்குதல் நடத்தியதில், 13 பேர் காயமடைந்தனர். நேற்று பாக்., ராணுவத்தினர் பீரங்கியால் சுட்டதில், மொத்தம் ஏழு சிறுவர்கள் உட்பட 41 பேர் காயமடைந்துள்ளனர். பூஞ்சில் வீடுகள் மீது குண்டுகளை வீசியதால், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் தாக்குதல் நடத்துவதில்லை என செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாக்., அத்துமீறியுள்ளது. இதனால் ஜம்மு - -காஷ்மீரில் எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.