ADDED : ஜூன் 04, 2025 11:58 PM
போபால்: மத்திய பிரதேசத்தில் வேன் மீது, சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில், திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர்; இரண்டு பேர் காயமடைந்தனர்.
ம.பி.,யின் ஜபுவா மாவட்டம், ஷிவ்கர் மஹுதா கிராமத்தில், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர், பாவ்புரா என்ற இடத்தில் நடந்த திருமணத்தில் பங்கேற்க சென்றனர்.
திருமணம் முடிந்து வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, சஞ்சேலி ரயில் மேம்பாலத்தில் வேன் சென்றபோது விபத்து ஏற்பட்டது. மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த சிமென்ட் லாரி, கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது கவிழ்ந்தது.
வேனில் பயணித்த 11 பேரில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்; இருவர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள். தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

