பைக் மீது மோதுவதை தவிர்த்ததால் விபத்து! மஹா.,வில் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலி
பைக் மீது மோதுவதை தவிர்த்ததால் விபத்து! மஹா.,வில் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலி
ADDED : நவ 29, 2024 06:30 PM

நாக்பூர்: மஹாராஷ்டிராவில் பைக் மீது மோதுவதை தவிர்க்க அரசு பஸ்சை டிரைவர் திருப்பிய போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
நாக்பூரில் இருந்து கோண்டியா பகுதிக்கு 35 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. காஜ்ர் என்ற கிராமம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக பைக் ஒன்று சாலையில் குறுக்கிட்டதாக தெரிகிறது. பைக் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பி உள்ளார்.
அதிவேகத்தில் சென்று கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் நொடிப்பொழுதில் அங்கேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்தவர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்து குறித்து உள்ளூர் மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் போலீசார், உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். சடலங்களை மீட்ட அவர்கள், படுகாயம் அடைந்த 26 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பற்றிய விவரம் அறிந்த தேவேந்திர பட்னவிஸ் எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
தேவைப்பட்டால் காயம் அடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்க வழிகாட்டப்பட்டுள்ளது. உரிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்ட உயரதிகாரிகள் சம்பவ பகுதிக்குச் சென்றுள்ளனர். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் பெற கடவுளை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பதிவில் கூறி உள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.