UPDATED : ஜூன் 06, 2026 10:33 PM
ADDED : ஜூன் 06, 2026 10:22 PM

சண்டிகர்: பஞ்சாபில், வேன் - லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் பலியாகினர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஞ்சாபில் பாசில்கா மாவட்டத்தின் ஜலாலாபாதைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், இறந்த தங்கள் உறவினரின் அஸ்தியை, அமிர்தசரசில் உள்ள பீஸ் ஆற்றில் கரைக்க முடிவு செய்தனர். இதற்காக, அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என 25க்கும் மேற்பட்டோர், பிக் - அப் வேனில் அதிகாலை 3:30 மணிக்கு புறப்பட்டனர்.
அந்த வேன், பெரோஸ்பூர் - பாசில்கா சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினரின் உதவியுடன் விபத்தில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியானது தெரியவந்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20 பேர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், வரும் வழியில் ஐந்து பேர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்தது. மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
