9 கொலைகளை செய்தேன் நிதிஷ் கட்சி எம்.எல்.ஏ., ‘பகீர்’
9 கொலைகளை செய்தேன் நிதிஷ் கட்சி எம்.எல்.ஏ., ‘பகீர்’
UPDATED : அக் 17, 2026 08:00 PM
ADDED : அக் 17, 2026 07:54 PM

பாட்னா: ‘‘நிதிஷ் குமார் அரசியலில் காலுான்ற திணறிய காலத்தில், அவருக்கு உதவுவதற்காக, ஒன்பது பேரை தீர்த்துக் கட்டினேன்,’’ என, பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ., அனந்த் சிங், 65, கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ‘‘நான் அப்படி சொல்லவே இல்லை,’’ என, அவர் பல்டி அடித்தார்.
பீஹாரில் பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில், முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், முக்கிய கூட்டணி கட்சியாக உள்ளது. இந்த சூழலில், பீஹார் சட்ட மேல்சபையில் காலியாக உள்ள எட்டு இடங்களுக்கு வரும், 23ல் தேர்தல் நடக்கிறது.
இதில், தன் அரசியல் எதிரியான நீரஜ் குமாருக்கு ஐக்கிய ஜனதா தளம் சீட் வழங்கியதால், அக்கட்சியின் மூத்த தலைவரும், பாட்னாவின் மோகாமா சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.,வுமான அனந்த் சிங் அதிருப்தி அடைந்தார்.
இந்நிலையில், அனந்த் சிங் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘எனக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையிலான உறவு தனித்துவமானது. பல ஆண்டு கால நட்புறவு அது. நிதிஷ் குமார் அரசியலில் தடம் பதிக்க முடியாமல் போராடிய காலத்தில், அவருக்கு துணையாக நின்றேன். அவருக்கு உதவுவதற்காக, ஒன்பது பேரை கொலை செய்தேன். ஆனால், எனக்கு எதிராக செயல்பட்ட நீரஜ் குமாருக்கு கட்சி தலைமை தற்போது சீட் வழங்கி இருப்பது, வேதனை அளிக்கிறது,’’ என்றார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மாநில அரசியலில் புயலை கிளப்பியது. இது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் ரஞ்சன், ‘‘அனந்த் சிங் கருத்துக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. நிதிஷ் குமார் களங்கமற்ற அரசியல் வரலாற்றை கொண்டவர். கிரிமினல்களுடன் கூட்டு வைப்பதோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதோ அவரது வழக்கமல்ல. இத்தகைய ஆதாரமற்ற கருத்துகளை கட்சியும் கவனத்தில் கொள்ளாது; மக்களும் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்,’’ என்றார்.
கட்சியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தன் கருத்தை அனந்த் சிங் திரும்ப பெற்றார். அவர் கூறுகையில், ‘‘லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக் காலத்தில், என் ஆதரவாளர்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இதை நினைவூட்டவே விரும்பினேன். நிதிஷ் குமாருக்கு ஆதரவாக நின்ற காரணத்தாலேயே, லாலு பிரசாத் அவர்களை கொலை செய்தார் என்று தான் சொல்ல வந்தேன். ஆனால், என் வார்த்தைகளை ஊடகங்களும், எதிர்க்கட்சியினரும் தவறாக புரிந்து கொண்டு திரித்து கூறி விட்டனர்,’’ எனக் கூறி பல்டி அடித்தார்.
அம்பலம்!
ஒன்பது கொலைகளை செய்ததாக வெளிப்படையாக அனந்த் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். நிதிஷ் குமார் முதல்வராக இருந்த காலத்தில், அவருக்காகவே இந்த கொலைகள் செய்யப்பட்டுள்ளன என்பது, இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. கட்சி அழுத்தத்தால் அனந்த் சிங், அந்தர் பல்டி அடித்தாலும், பிரபல தாதா கும்பல்களுடன் கூட்டணி வைத்தே நிதிஷ் குமார் தன் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்கினார் என்பது மறுக்க முடியாத உண்மை.
- சக்தி சிங் யாதவ்
செய்தித் தொடர்பாளர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
