கிக் பாக்சிங்கில் 9 வயது சிறுமி உலக சாம்பியன் உலக சாம்பியன்
கிக் பாக்சிங்கில் 9 வயது சிறுமி உலக சாம்பியன் உலக சாம்பியன்
ADDED : டிச 20, 2024 05:46 AM

சாதிக்க வயது தடை இல்லை என்பதை, குடகு மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி நிரூபித்துள்ளார்.
குடகு மாவட்டத்தின் குஷால் நகர், குடுமங்களூரு கிராமத்தை சேர்ந்தவர்கள் அமித் - திவ்யா தம்பதி. இவர்களின் 9 வயது மகள் அஜ்னா. எம்.பி.ஏ., முடித்திருந்த இவரது தந்தை அமித், பணி காரணமாக, மலேஷியாவுக்கு சென்றிருந்தார்.
அங்கு ஓய்வு நேரத்தில் பாக்சிங் கற்க துவங்கினார். பின், கலப்பு தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்று தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றார்.
தந்தையின் போட்டி, பயிற்சியை பார்த்த அவரது மகள் அஜ்னா, தனது 4 வயதில் தந்தை பயிற்சி செய்யும் போது, அவரும் கிக் பாக்சிங் பயிற்சி பெற்றார்.
மகளின் ஆர்வம், ஈடுபாட்டை கண்ட தந்தை, கலப்பு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க துவக்கினார்.
இதன் பலனாக, இந்தோனேஷியாவில் நடந்த 10 வயதுக்கு உட்பட்டோருக்கான, சர்வதேச கலப்பு தற்காப்பு கலை கிக் பாக்சிங்கில் சாம்பியன்ஷிப் பெற்றார். இவருக்கு எதிராக இறுதி சுற்றில் பலம் வாய்ந்த சிறுமி போட்டியிட்டாலும், தனது அசாத்திய திறமை, நுணுக்கத்தை பயன்படுத்தி, எதிராளியை தோற்கடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.
இதன் மூலம் நாட்டில் இளம் வயதில் கிக் பாக்சிங்கில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் சிறுமி என்ற பெயர் பெற்றார்.
இது குறித்து அஜ்னா கூறுகையில், ''உலக சாம்பியன் ஆக வேண்டும் என்பதற்காக கடின பயிற்சி மேற்கொண்டேன். இது முடிவல்ல, என்னுடைய கனவை அடைய இன்னும் போக வேண்டிய துாரம் உள்ளது.
''ஐ.எப்.சி., எனும் அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்ஷிப்பில், உலகளவில் முதலிடம் பெற வேண்டும் என்பதே எனது கனவு.
''இதற்காக இப்போதிருந்தே எனது பயிற்சியை துவக்கி விட்டேன். ஒரு நாள் என் கனவை நனவாக்குவேன்,'' என்றார்.
அஜ்னாவின் தந்தையும், பயிற்சியாளருமான அமித் கூறுகையில், ''என் மகளின் சாதனை எனக்கு மகிழ்ச்சி அளிப்பதுடன், ஊக்கமும் அளிக்கிறது.
எனக்கும் தற்காப்பு கலை கற்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால், எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவளிக்கவில்லை.
''ஆனாலும், இக்கலையை கற்று தேசிய, சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்றேன். ஒரு நாள் என் மகள் ஐ.எப்.சி., சாம்பியனாவாள். அதற்கு அனைத்து விதமான ஆதரவும் வழங்கி வருகிறோம்,'' என்றார் - நமது நிருபர் -.