9 நாட்களில் ரூ.9.3 கோடி வருவாய்; ஹாசனாம்பா கோவில் நடை அடைப்பு
9 நாட்களில் ரூ.9.3 கோடி வருவாய்; ஹாசனாம்பா கோவில் நடை அடைப்பு
ADDED : நவ 03, 2024 11:35 PM

ஹாசன் ; லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளித்த ஹாசனாம்பா கோவில் கதவு, சம்பிரதாயப்படி பூஜை செய்து, நேற்று மதியம் அடைக்கப்பட்டது.
ஹாசனின், ஹாசனாம்பா கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வரலாற்று புகழ் பெற்றது. ஹாசனின் சக்தி தேவதையாக விளங்கும் ஹாசனாம்பா, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் தருவார். ஆண்டுக்கு ஒருமுறை கோவில் திறப்பது வழக்கம்.
நடப்பாண்டு அக்டோபர் 24ம் தேதி, ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது. 25ம் தேதி முதல், நேற்று காலை 6:00 மணி வரை, தரிசனத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
ஒன்பது நாட்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஹாசனாம்பாவை தரிசனம் செய்தனர். கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் குமாரசாமி, துணை முதல்வர், முன்னாள் எம்.பி., சுரேஷ் உட்பட, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பொது மக்கள் ஹாசனாம்பாவை தரிசனம் செய்தனர்.
கோவிலில் நேற்று முன்தினம் இரவு, ரதோற்சவம் நடந்தது.
காலை 6:00 மணி வரை மட்டுமே, தரிசனத்துக்கு வாய்ப்பு இருந்ததால், நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே பக்தர்கள் வரிசையில் நின்றனர்.
நேரம் முடிந்ததால் பலருக்கும் தரிசனத்துக்கு வாய்ப்பு கிடைக்காமல் வருத்தத்துடன், வெளியில் இருந்து நமஸ்கரித்துவிட்டு சென்றனர்.
மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜண்ணா, எம்.எல்.ஏ., ஸ்வரூப், கலெக்டர் சத்யபாமா, எஸ்.பி., முகமது சுஜிதா, உதவி கமிஷனர் மாருதி முன்னிலையில், நேற்று மதியம் 12:00 மணிக்கு, ஹாசனாம்பா கோவில் நடை அடைக்கப்பட்டது. அதற்கு முன் சாஸ்திர, சம்பிரதாயப்படி பூஜைகள் நடத்தப்பட்டன.
கடந்த ஒன்பது நாட்களில், 9.3 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் 25ல், ஹாசனாம்பா கோவிலில் மீண்டும் நடை திறக்கப்படும்.