ADDED : அக் 18, 2024 07:28 AM

இன்றைய இளம் தலைமுறையினருக்கு விளையாட்டு துறையில், ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது.
விளையாட்டு போட்டிகளில் ஜூனியர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், விளையாடி அசத்துகின்றனர். இவர்களில் பெங்களூரை சேர்ந்த நீச்சல் வீராங்கனை குறிப்பிடத்தக்கவர்.
பெங்களூரின் சி.வி.ராமன் நகரை சேர்ந்தவர், திநிதி தேசிங்கு, 14. கடந்த 2010 ம் ஆண்டு மே 17ம் தேதி பிறந்தவர். 2018ல் அவருக்கு 8 வயது இருக்கும் போது, பள்ளி விடுமுறையின் போது, பொழுதுபோக்கிற்காக நீச்சல் பழக சென்றார்.
ஆனால் அவருக்கு நீச்சல் அடிப்பது பிடித்தது. இப்போட்டிகளில் சாதனை படைக்கும் ஆர்வம் வந்தது.
இதனால், 'டால்பின் அக்வாடிக்ஸ்' என்ற பயிற்சி மையத்தில் மதுகுமார் என்பவரிடம் பயிற்சிக்கு சேர்ந்தார். ப்ரீ ஸ்டைல் நீச்சல் அடிக்கும் முறையில் நிபுணத்துவம் பெற்றார். 2022ல் 12வது வயதில், ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றார்.
இளம் இந்திய வீராங்கனை என்ற பெயரும் பெற்றார். கடந்த 2023ல் ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் தேசிய சாதனை படைத்தார்.
கோவாவில் நடந்த தேசிய விளையாட்டு போட்டிகளில், ஏழு தங்கப் பதக்கம் வென்றார். கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த 200 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார்.
இந்த ஆண்டு கர்நாடக மினி ஒலிம்பிக் மற்றும் கர்நாடக ஜூனியர் மற்றும் சப் - ஜூனியர், அக்வாடிக் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றார்
- நமது நிருபர் -.