மனக்கணித போட்டியில் ஒரே நாளில் 6 கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்: 14 வயது மனித கால்குலேட்டரின் அசாத்திய திறமை
மனக்கணித போட்டியில் ஒரே நாளில் 6 கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்: 14 வயது மனித கால்குலேட்டரின் அசாத்திய திறமை
UPDATED : பிப் 21, 2025 05:17 AM
ADDED : பிப் 21, 2025 01:06 AM

மும்பை: மனக்கணிதப் போட்டியில் அபாரமாக கணக்கிட்டு, ஒரே நாளில் ஆறு கின்னஸ் சாதனைகளை படைத்த, மஹாராஷ்டிராவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஆர்யன் சுக்லாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
மஹாராஷ்டிராவின் நாசிக்கைச் சேர்ந்த சிறுவன் ஆர்யன் சுக்லா, 14; சிறு வயது முதலே கணிதத்தின் மீதான ஆர்வம் காரணமாக, மிக வேகமாகவும், துல்லியமாகவும் மனக் கணக்கில் சிறந்து விளங்கினார்.
பட்டம்
தன், 6 வயது முதலே உலகளவில் பல்வேறு மனக் கணித போட்டிகளில் பங்கேற்று சாதனைகளை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு இத்தாலி நாட்டின், 'டிவி' தொடரான, 'லோ ஷோ டீ ரெக்கார்ட்'ல் பங்கேற்ற இவர், 50 ஐந்து இலக்க எண்களை கால்குலேட்டர் உதவியின்றி, 25.19 வினாடிகளுக்குள் மனதிற்குள்ளேயே வேகமாக கூட்டி சாதனை படைத்தார்.
இந்த சாதனையின் போது, ஒரு கூட்டலை கணக்கிட அவருக்கு 0.5 வினாடிகள்மட்டுமே தேவைப்பட்டது.
'மனித கால்குலேட்டர்' என்ற பட்டத்துடன் பல்வேறு போட்டிகளில் அசத்திய சிறுவன் ஆர்யன், சமீபத்தில் ஒரே நாளில் ஆறு கின்னஸ் சாதனைகளை படைத்தார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், இந்த சாதனைக்கான ஏற்பாட்டை கின்னஸ் நிறுவனம் செய்திருந்தது.
யோகா, தியானம்
இதில் பங்கேற்ற ஆர்யன், பேனா, பேப்பர் மற்றும் கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த கருவியும் இன்றி மனதாலேயே கணக்கிட்டு பார்வையாளர்களை வாயடைக்க செய்தார்.
முதலில், 100 நான்கு இலக்க எண்களை மனதளவில் கூட்டுவதற்கு 30.9 வினாடிகள் எடுத்துக் கொண்ட ஆர்யன், 200 நான்கு இலக்க எண்களை கூட்ட, 1 நிமிடம் 9.68 வினாடிகள் எடுத்துக் கொண்டார்.
அதேபோல், 50 ஐந்து இலக்க எண்களை 18.71 வினாடிகளில் மனதளவில் கூட்டி சாதனை படைத்தார்.
அடுத்ததாக, 20 இலக்க எண்ணை மனரீதியாக 10 இலக்க எண்ணால், வகுக்க இவர் எடுத்துக்கொண்ட நேரம் 5 நிமிடம் 42 வினாடிகள்.
இரண்டு ஐந்து இலக்க எண்களை, 10களின் தொகுப்பை மனரீதியாகப் பெருக்க 51.69 வினாடிகள் ஆர்யன் எடுத்துக் கொண்டார்.
இரண்டு எட்டு இலக்க எண்களை, பத்தின் தொகுப்பை 2 நிமிடம் 35.41 வினாடிகளில் பெருக்கி முடித்தார்.
இது குறித்து ஆர்யன் கூறுகையில், “போட்டிகளில் தயாராவதற்கு முன் பயிற்சி அவசியம் என்பதால், நாள்தோறும் மனக் கணக்கு தொடர்பாக நான்கு முதல் ஐந்து மணி நேரம் பயிற்சி செய்கிறேன். ''போட்டிகளில் அமைதியாக கவனம் செலுத்த யோகா மற்றும் தியானம் எனக்கு உதவுகிறது,” என்றார்.

