30 நிமிடத்தில் 10 களி உருண்டை சாப்பிட்ட 62 வயது முதியவர்
30 நிமிடத்தில் 10 களி உருண்டை சாப்பிட்ட 62 வயது முதியவர்
ADDED : ஜன 03, 2024 07:45 AM

மாண்டியா: சிறுதானிய மேளா கண்காட்சியில், 10 கேழ்வரகு களி உருண்டைகளை, 30 நிமிடத்தில் சாப்பிட்டு 62 வயது முதியவர் அசத்தினார்.
மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணாவில் விவசாய துறை சார்பில், சிறுதானிய மேளா கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சியை ஒட்டி, கேழ்வரகு களி சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் பத்து பேர் பங்கேற்றனர். 30 நிமிடத்தில் அதிக கேழ்வரகு களி சாப்பிடும் நபர், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்பது போட்டியின் விதியாக இருந்தது.
ஒரு கேழ்வரகு களி உருண்டையை சாப்பிட்டதும், இன்னொரு களி கொடுக்கப்பட்டது. களியை தொட்டு சாப்பிட்ட சூடான கோழி குழம்பும் வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் 10 பேரும் மல்லுக்கட்டினர்.
இறுதியில், ஸ்ரீரங்கப்பட்டணா அருகே அரகெரே கிராமத்தில் வசிக்கும், விவசாயி எரேகவுடா, 62, என்பவர் 10 களி உருண்டையை 30 நிமிடத்தில் சாப்பிட்டு வெற்றி பெற்றார். 2 கிலோ 700 கிராம் எடையுள்ள, களியை அவர் சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இடம் பிடித்த திலீப் என்பவர் எட்டு களி, மூன்றாம் இடம் பிடித்த ரவீந்திரா ஏழு களியையும் சாப்பிட்டனர்.
இப்போட்டியில் மாண்டியா விவசாய துறை இணை இயக்குனர் அசோக்கும் கலந்து கொண்டார். அவர் நான்கு களி சாப்பிட்டார்.