UPDATED : ஜன 21, 2025 03:25 PM
ADDED : ஜன 21, 2025 12:11 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், சாலையோரம் பிச்சை எடுக்கும் நபர், 1.44 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மொபைல் போன்' பயன்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடக பயனாளர், ரோஹித் இன்பார்ம்ஸ் என்பவர், தன் சமூக ஊடக பக்கத்தில் வீடியோ ஒன்றை சமீபத்தில் பகிர்ந்தார்.
அதில், சாலையோரம் பிச்சை எடுக்கும் நபர் கையில், 'ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மொபைல் போன்' வைத்தபடி பிச்சை எடுக்கும் காட்சி இடம் பெற்று இருந்தது.
'ஆப்பிள்' நிறுவனத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த மாடல் போன், 1.44 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிச்சை எடுக்கும் நபர், இந்த விலை உயர்ந்த போன் பயன்படுத்துவதை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.
இந்த காட்சி, ராஜஸ்தானின் அஜ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், பிச்சை எடுக்கும் நபரிடம், 'இவ்வளவு விலை உயர்ந்த போன் வாங்க பணம் எப்படி கிடைத்தது?' என கேட்கப்படுகிறது.
அதற்கு, 'பிச்சை எடுத்து அதில் சேர்ந்த பணத்தில் தான் வாங்கினேன். மாத தவணை அல்ல, மொத்த பணத்தையும் கொடுத்து தான் வாங்கினேன்' என, அவர் பதில் அளிக்கிறார்.
இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவலான விவாதத்தை உருவாக்கி உள்ளது.

