ADDED : நவ 23, 2024 08:38 AM
பணஜி : கோவாவில், கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலில் படகு மோதியதை அடுத்து, அதிலிருந்த மீனவர்களில் இருவர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல், கோவா கடற்கரையில் இருந்து, 130 கி.மீ., துாரத்தில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுஇருந்தது.
அப்போது, ஒரு படகில் 13 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக, அந்த படகு நீர்மூழ்கி கப்பலில் மோதி கவிழ்ந்தது.
அதிலிருந்த மீனவர்கள் அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். சில மணிநேர போராட்டத்துக்கு பின், 11 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மாயமான இருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
கடற்படையின் ஆறு கப்பல்கள், விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளன. மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் உதவியுடன், மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
மீட்கப்பட்ட 11 மீனவர்களுக்கு கோவா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

