ரூ.703 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பு மும்பையில் வாங்கிய பெண் தொழிலதிபர்
ரூ.703 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பு மும்பையில் வாங்கிய பெண் தொழிலதிபர்
ADDED : ஜூன் 04, 2025 11:53 PM

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் பெண் தொழிலதிபர் ஒருவர், 703 கோடி ரூபாய்க்கு நான்கு மாடிகள் உடைய வீடு வாங்கியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வசித்து வருகின்றனர்.
அங்குள்ள பல்வேறு பகுதிகளில் வீடு மற்றும் நிலங்களை அவர்கள் வாங்கி குவித்து வருவதால், அதற்கான விலை தாறுமாறாக ஏறி வருகிறது.
40 மாடி உயர கட்டடம்
குறிப்பாக, தெற்கு மற்றும் மேற்கு மும்பை புறநகரில் உள்ள பாந்த்ரா, அந்தேரி போன்ற பகுதியில் கடற்கரையை ஒட்டி கட்டப்படும் கட்டடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை, நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், வொர்லி கடற்கரையை ஒட்டிய சாலையில், 'நமன் சானா' எனப்படும் 40 மாடி உயர கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு, 22 குடியிருப்பு தளங்களும், 11 வாகனம் நிறுத்துவதற்கான தளங்களும் கட்டப்பட்டுள்ளன.
22,572 சதுர அடி
கட்டடத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், அதில் உள்ள வீடுகளை பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.
இந்த கட்டடத்தில் உள்ள 32 முதல் 35 வரையிலான நான்கு மாடிகள் உள்ள வீட்டை, மும்பையை சேர்ந்த யு-.எஸ்.வி., மருந்து நிறுவனத்தின் தலைவராக உள்ள பெண் தொழிலதிபர் லீனா காந்தி திவாரி சமீபத்தில் வாங்கியுள்ளார்.
'டியூப்ளே' எனப்படும், இரண்டு மாடிகள் உடைய இரண்டு வீடுகளை அவர் வாங்கியுள்ளார். இந்த வீடுகளின் மொத்த பரப்பளவு 22,572 சதுர அடி.
அரபிக்கடலை ஒட்டி இருக்கும் இந்த கட்டடத்தில் வாங்கப்பட்டுள்ள இந்த வீடுகளுக்காக 703 கோடி ரூபாயை தொழிலதிபர் திவாரி செலவு செய்துள்ளார்.
இதில், வீட்டின் விலை மட்டும் 639 கோடி ரூபாய். இந்த வீட்டிற்கான பதிவு மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணம் 63.9 கோடி ரூபாய் என பத்திர பதிவின் வாயிலாக தெரியவந்துள்ளது.