ADDED : மார் 14, 2024 11:28 PM

புதுடில்லி:பாலிடெக்னிக் மாணவர் ஓட்டிச் சென்ற கார் மோதி காஜிப்பூர் மார்க்கெட்டில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
கிழக்கு டில்லியின் நெரிசல் மிகுந்த பகுதி காஜிப்பூர் மார்க்கெட். இங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென தறிகெட்டு ஓடிய கார், கடைகளின் மீது மோதி நின்றது. விபத்தை ஏற்படுத்தியவர்கள், காரில் இருந்து இறங்கி தப்பிக்க முயற்சி செய்தனர்.
அவர்களை அப்பகுதி மக்கள் பிடித்து, சரமாரியாக அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
காரையும் அடித்து நொறுக்கினர். விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் காயமடைந்த 9 பேரை மீட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சீதா தேவி, 22, என்ற இளம்பெண் உயிரிழந்தார். அவரது சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தியது 17 வயது சிறுவன் என்பதால் அவரது பெயர் விபரங்களை போலீசார் வெளியிடவில்லை.
காரில் அவரை தவிர மேலும் ஒரு சிறுவன் இருந்திருக்கிறான். இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அத்துடன் சிறுவனுக்கு காரை வழங்கியது தொடர்பாக கார் உரிமையாளரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

