தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறிப்பு இளம்பெண் உட்பட 3 பேர் மீது வழக்கு
தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறிப்பு இளம்பெண் உட்பட 3 பேர் மீது வழக்கு
ADDED : செப் 19, 2024 11:02 PM
அசோக்நகர்: நெருக்கமாக இருந்த வீடியோ வெளியிடுவதாக, 'ஹனிடிராப்' முறையில் மிரட்டி, தொழிலதிபரிடம் 40 லட்சம் ரூபாய் பறித்த, இளம்பெண் உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
பெங்களூரு அசோக் நகரை சேர்ந்தவர் கணேஷ், 45. தொழிலதிபர். எம்.ஜி.ரோட்டில் ஸ்டூடியோ நடத்துகிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன், குடும்பா என்ற செயலி மூலம், கணேஷுக்கும், காவ்யா, 26 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மொபைல் போனில் பேசினர். பின், கணேஷை அவரது ஸ்டூடியோவில் இளம்பெண் சந்தித்தார்.
'சினிமா தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பாட்டீல் என்பவரின் படத்தில், நடிக்க உள்ளேன். தயாரிப்பாளருக்கு பண பிரச்னை உள்ளது. 4 லட்சம் ரூபாய் கொடுத்து உதவுங்கள்' என்று, கணேஷிடம், இளம்பெண் கேட்டு உள்ளார். அவரும் பணம் கொடுத்து உள்ளார்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், பணத்தை காவ்யா திரும்ப கொடுக்கவில்லை. பணத்தை தரும்படி கணேஷ் கேட்டு உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு கணேஷிடம், மொபைல் போனில் பேசிய காவ்யா, 'கொட்டிகெரேயில் ஒரு வீட்டில் இருக்கிறேன். அங்கு வந்து பணம் வாங்கி கொள்ளுங்கள்' என்று கூறினார். அந்த வீட்டிற்கு கணேஷ் சென்றார். அப்போது அவருடன் காவ்யா நெருக்கமாக இருந்தார்.
இதை காவ்யாவின் நண்பர்கள் திலீப், 27, ரவிகுமார், 28 ஆகியோர், மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை கணேஷிடம் காண்பித்தனர்.
'நாங்கள் கேட்கும் போது பணம் தராவிட்டால், சமூக வலைதளங்களில் வெளியிடுவோம்' என்று மிரட்டினர். பயந்து போன கணேஷும், காவ்யா கேட்கும் போது எல்லாம், கொஞ்சம், கொஞ்சமாக 40 லட்சம் ரூபாய் வரை கொடுத்து உள்ளார்.
இதற்கிடையில் சமீபத்தில் புதிய பைக் வாங்கிய காவ்யா, அந்த பைக்கிற்கு இ.எம்.ஐ., கட்டும்படி கணேஷுக்கு தொந்தரவு கொடுத்து உள்ளார்.
மனம் உடைந்த கணேஷ், காவ்யா, திலீப், ரவிகுமார் மீது நேற்று அசோக்நகர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், மூன்று பேரையும் தேடுகின்றனர்.