6ம் வகுப்பு மாணவன் பல்லை உடைத்த ஆசிரியை மீது வழக்கு
6ம் வகுப்பு மாணவன் பல்லை உடைத்த ஆசிரியை மீது வழக்கு
ADDED : நவ 08, 2024 10:54 PM
ஜெயநகர்: ஆறாம் வகுப்பு மாணவனின் பல்லை உடைத்ததாக, தனியார் பள்ளி ஆசிரியை மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
பெங்களூரு ஜெயநகரில் வசிப்பவர் அனில் குமார். இவரது மகன் அஸ்வின், 11. தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறார்.
நேற்று முன்தினம் மாலையில், பள்ளி நேரத்தில் அஸ்வினும், அவரது வகுப்பு தோழர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
இதுபற்றி ஆசிரியை அஸ்மத், 30, என்பவரிடம், அஸ்வின் கூறியுள்ளார். அப்போது அஸ்வினை, அஸ்மத் மூங்கில் பிரம்பால் கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் அஸ்வினின் பல் உடைந்து விழுந்தது. வீட்டிற்குச் சென்ற அஸ்வின், ஆசிரியை அடித்து பல் உடைந்ததாக கூறினார். அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அஸ்மத் மீது, ஜெயநகர் போலீசில் அனில்குமார் புகார் செய்தார். புகாரின்படி வழக்குப் பதிவானது.
ஆசிரியை அஸ்ம் கூறுகையில், ''மாணவர் அஸ்வினை, நான் அடிக்கவே இல்லை. மாணவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் அவரது பல் உடைந்து விழுந்தது. என் மீது வேண்டுமென்று பழிபோடுகின்றனர்.
''பள்ளிக்கு வந்த அஸ்வின் தந்தை அனில்குமார், எனது மதத்தை பற்றி விசாரித்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை. போலீஸ் நிலையத்தில், அஸ்வின் பெற்றோரின் காலில் விழுந்தும் கூட அவர்கள் மனம் இரங்கவில்லை,'' என்றார்.