ரூ.50 கோடி கேட்டு மிரட்டல் குமாரசாமி மீது வழக்கு பதிவு
ரூ.50 கோடி கேட்டு மிரட்டல் குமாரசாமி மீது வழக்கு பதிவு
ADDED : அக் 04, 2024 12:15 AM

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் விஜய் டாடா. தொழிலதிபரான இவர், கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனம் மீதான புகார் குறித்து விசாரிக்காமல் இருக்க, லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி., சந்திரசேகர் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி இருப்பதாக, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி சமீபத்தில் குற்றஞ்சாட்டி இருந்தார்.
பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் விஜய் டாடா அளித்த புகார்:
ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.சி., ரமேஷ் கவுடா, சில தினங்களுக்கு முன் என் வீட்டுக்கு வந்தார். சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் நிகில் போட்டியிட உள்ளார். தேர்தலுக்கு செலவு செய்ய, 50 கோடி ரூபாய் தரும்படி என்னிடம் கேட்டார்.
அப்போது, என்னிடம் மொபைல் போனில் பேசிய மத்திய அமைச்சர் குமாரசாமியும், 'பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களை பணி செய்ய விடமாட்டோம்' என மிரட்டினார்.
பின், ரமேஷ் கவுடா என்னிடம், 'கோவில் கட்ட வேண்டும். அதற்காக, 5 கோடி ரூபாய் கொடுங்கள்' என்று கேட்டார். 'இப்போது என்னிடம் பணம் இல்லை' என்று கூறினேன். ஆனாலும், ஒரு வாரமாக எனக்கு குறுந்தகவல் அனுப்பி வருகிறார்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
இது குறித்து குமாரசாமி கூறுகையில், “தொழிலதிபர் விஜய் டாடா என் மீது அளித்த புகார் பற்றி போலீசார் விசாரிக்கட்டும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,” என்றார்.
இந்நிலையில், குமாரசாமி, ரமேஷ் கவுடா மீது மிரட்டி பணம் பறிப்பு, குற்றவியல் சதி ஆகிய இரு பிரிவுகளில் நேற்று இரவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

