ADDED : நவ 19, 2024 06:37 AM
மைசூரு: ''முதல்வர் மாற்றம் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. பா.ஜ.,வினர் தான் கூறி வருகின்றனர்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இடைத்தேர்தலின்போது, மத்திய அமைச்சர் குமாரசாமி குறித்து, அமைச்சர் ஜமீர் அகமது கான் பேசியது, கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க, மாநிலத் தலைவர் உத்தரவிட்டால், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், குழுத்தலைவர் ரஹீம்கான் நடவடிக்கை எடுப்பார். நான் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினராக இருந்தபோது, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவிக்கும் தலைவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை அழைத்துப் பேசுவோம்; தேவைப்பட்டால் சஸ்பெண்ட் செய்வோம்.
முதல்வர் மாற்றம் குறித்து, நாங்கள் எந்த விவாதமும் நடத்தவில்லை. அப்படி இருந்தும், பா.ஜ., - ம.ஜ.த.,வினர் தான், இது பற்றி பேசுகின்றனர். முதல்வரை பார்த்தாலே, பா.ஜ.,வினர் கொதிப்படைகின்றனர். அவர்களே, சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க தேதியையும் நிர்ணயிப்பர்.
தனக்காக தெருவில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்துவர் என்று முதல்வர் கூறுவது சாதாரண விஷயம் அல்ல. அவர் மீது குற்றஞ்சாட்டினால், குறிப்பாக மைசூரு மக்கள் என்ன செய்வர்?
பெங்களூரு மாநகராட்சியில் 40 சதவீதம் கமிஷன் தொடர்பாக, ஒப்பந்தாரர்கள் சங்கத் தலைவர் கெம்பண்ணா அளித்த கடிதத்தின் அடிப்படையில் போராடினோம். அதே ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. இப்போது எந்த அடிப்படையில் ஆதாரம் இல்லை என்று லோக் ஆயுக்தா கூறியது என்பதை ஆய்வு செய்வோம். தேவைப்பட்டால், மீண்டும் விசாரிக்க தயாராக இருக்கிறோம்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க பா.ஜ.,வினர் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பர். இதுதொடர்பாக முதல்வர் கூறியதில் உண்மை இருக்கலாம். இவ்விஷயத்தில் உரிய ஆவணம் கிடைத்தால், ஆப்பரேஷன் தாமரை விவகாரத்தில் பா.ஜ., மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

