ADDED : செப் 21, 2024 11:15 PM
பெங்களூரு: கே.ஆர்., மார்க்கெட் மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றிலும், 'வாருங்கள் பாருங்கள்' என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணியருக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், சுற்றுலா பயணியர் பெங்களூரு வருகின்றனர். இங்குள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்கின்றனர். இவர்களுக்கு எந்தெந்த சுற்றுலா இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பது தெரிவது இல்லை.
தகவல் கிடைக்கும் இடங்களை பார்த்துவிட்டுச் செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக, நகர போக்குவரத்து இயக்குனரகம், பெங்களூரு மெட்ரோ நிறுவனம் ஒருங்கிணைந்து, பலகைகள் பொருத்தியுள்ளன.
கே.ஆர்., மார்க்கெட் மெட்ரோ நிலையத்தை சுற்றிலும், 1.5 கி.மீ.,க்கு ஒன்று வீதம் 'வாருங்கள், பாருங்கள்' என்ற அறிவிப்பு பலகை தென்படுகிறது.. அறிவிப்பு பலகையில் 20ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை வெங்கடரமண சுவாமி, திப்பு சுல்தான் கோடை அரண்மணை பற்றிய தகவல்கள் உள்ளன.
இந்த இடத்துக்கு எப்படி செல்ல வேண்டும் என்ற வழிகாட்டி வரை படமும் உள்ளன.
ஆங்கிலம், கன்னடம் என இரண்டு மொழிகளிலும் தகவல் உள்ளதால், சுற்றுலா பயணியருக்கு உதவியாக உள்ளது.
மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில் பாதை, பெங்களூரின் பல புராதன இடங்களை கடந்து செல்கிறது. இத்தகைய தலங்களை சுற்றுலா பயணியர் தெரிந்து கொள்ளும் வகையில், தகவல் பலகைகள் வைத்துள்ளோம்.
இது போன்ற அறிவிப்பு பலகைகள் வைக்கும் திட்டத்தை 2016ல், வகுத்தோம். ஆனால் கொரோனா பரவியதால், திட்டத்தை செயல்படுத்தியது தாமதமானது. புராதன இடங்களை மக்கள் எளிதில் தெரிந்து கொள்ள, தகவல் பலகை உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.