லோக்சபா தேர்தலில் போட்டியா? அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம்
லோக்சபா தேர்தலில் போட்டியா? அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம்
ADDED : ஜன 08, 2024 11:47 PM

பெங்களூரு: லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகிறது. இதில் அமைச்சர்கள் போட்டியிடுவது குறித்து, ஆலோசிக்கவில்லை, என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரின், சதாசிவநகரில் உள்ள தன் இல்லத்தில் நேற்று அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் குறித்து, மாநில காங்கிரஸ் தலைவர், முதல்வர், அனைத்து மாவட்ட தலைவர்கள், முக்கிய தலைவர்களுடன், மாநில பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கலந்தாலோசிப்பார்.
லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநிலத்தின் அனைத்து தலைவர்களுக்கும் பொறுப்பு அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலை விட இம்முறை எங்கள் கட்சி நல்ல சூழ்நிலையில் உள்ளது.
ஏழை மக்கள் மற்றும் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், எங்கள் அரசு செயல்படுத்திய திட்டங்கள், கட்சியின் இமேஜை அதிகரிக்கும். லோக்சபா தேர்தலில் அமைச்சர்கள் போட்டியிடுவது குறித்து, இதுவரை ஆலோசிக்கவில்லை.
கடந்த முறை சித்ரதுர்கா தொகுதியில் என் பெயர் அடிபட்டது. இம்முறை கோலார் தொகுதியில் என் பெயர் அடிபடுகிறது. ஆனால் இதை பற்றி நான் ஆலோசிக்கவில்லை.
மாநில காங்கிரஸ் தலைவர் கூறுவதே, அதிகாரப்பூர்வமானது. முன்னாள் முதல்வர் குமாரசாமி பெரியவர். அவர் அரசின் பொறுப்பு, வளர்ச்சி குறித்து பேசினால், நாங்கள் பதிலளிக்கலாம். ஆனால் அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் பற்றி, எப்படி பதிலளிப்பது. நான் அவருடன் 14 மாதம் பணியாற்றியுள்ளேன். இப்படி ஏன் பேசுகிறார் என்பது தெரியவில்லை. அவரை போன்று பேச, எனக்கு தெரியாது.
வாக்குறுதி திட்டங்கள் செயல்படுத்தியதால், அரசுக்கு கஷ்டம் எதுவும் இல்லை. திட்டங்களுக்கு நிதியை சேகரிப்போம். மத்திய அரசிடம் இருந்து 1.50 லட்சம் கோடி ரூபாய் வர வேண்டும். இதுவரை வரவில்லை. மத்திய அரசிடம் இருந்து நிதி வந்தால், மேலும் வளர்ச்சி திட்டங்களுக்கு உதவியாக இருக்கும்.
ராமர் கோவிலுக்கு நானும் நன்கொடை வழங்கினேன். இது என் தனிப்பட்ட விஷயம். எவ்வளவு நன்கொடை வழங்கினேன் என்பதை கூற கூடாது. அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பது குறித்து, கட்சி மேலிடம் முடிவு செய்யும். நாங்கள் தனியாக ஒருநாள் சென்று பூஜிக்க, மேலிடம் முடிவு செய்தால், அதற்கும் நாங்கள் தயார். நாங்கள் ஹிந்துக்கள் இல்லையா, எங்கள் கட்சியில் ஹிந்துக்கள் இல்லையா.
இவ்வாறு அவர்கூறினார்.