ADDED : மார் 02, 2024 10:14 PM

கோடைகாலம் துவங்கிவிட்டது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. குளிர்சாதனம், மின் விசிறி இல்லாமல் இருக்கவே முடியவில்லை.
கர்நாடகாவின் பெங்களூரு, மைசூரு, பல்லாரி, கலபுரகி உட்பட பல மாவட்டங்களில் வெயில் தீயாய் கொளுத்துகிறது. மக்கள் பரிதவிக்கின்றனர். வீட்டை விட்டு வெளியே தலை காட்டவே அஞ்சுகின்றனர். அப்படியே வந்தாலும், குடையுடன் நடமாடுகின்றனர்.
ஆனால் இந்த நிலையிலும், பல்லாரியின் அலுவலகம் ஒன்று குளுமையாகவே உள்ளது. இங்கு குளிர்ச்சாதன கருவியோ அல்லது மின் விசிறியோ தேவையில்லை.
தலைமை அலுவலகம்
பல்லாரி நகரில் தலைமை தபால் அலுவலகம் உள்ளது. இந்த கட்டடம் வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். கட்டடம் அகலமான மேற்கூரை, வட்ட வடிவிலான ஜன்னல்கள் உள்ளன. கட்டட வடிவமே வித்தியாசமானது.
கடந்த, 1870ல் மதராஸ் பிரசிடென்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில், ஒரு துாணும் இல்லை. 30 ஆர்ச்சுகள், 16 கதவுகள் உள்ளன. 58 அடி அகலம், 166 அடி உயரத்தில் கட்டடம் கட்டப்பட்டது. மாறுபட்ட வடிவத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில், காற்றும், வெளிச்சமும் ஏராளமாக வரும். எப்போதும் குளுகுளுவென உள்ளது. இதன் அருகிலேயே, பிரபலமான ஏகஷிலா மலை இருந்தும், வெப்பத்தின் தாக்கம் அலுவலக கட்டடத்தை தாக்குவதில்லை.
இதற்கு முன்பு கட்டடம், விருந்தினர் இல்லமாக பயன்படுத்தப்பட்டது. மதராஸ் பிரசிடென்சி காலத்தில், பல்லாரி, ஆனந்தபுரம், கர்னுால், கடப்பா மாவட்டங்களின் தலைமை தபால் அலுவலகமாக இருந்தது.
இப்போது பல்லாரி தலைமை அலுவலகமாக மாறியுள்ளது. அன்றைய காலத்தில் ஆங்கிலேயர்கள், பல்லாரி வெயிலில் இருந்து தப்பிக்க, இந்த கட்டடத்தை கட்டியதாக கூறப்படுகிறது.
நிம்மதி
தற்போது கட்டப்படும் அரசு அலுவலக கட்டடங்களில், கோடைகாலத்தில் ஏ.சி., அல்லது மின் விசிறி கட்டாயம் வேண்டும்.
இல்லாவிட்டால் ஊழியர்களால் பணியாற்றவே முடியாது. ஆனால் பல்லாரி தபால் அலுவலகம் மட்டும், கோடை காலத்தில் குளுகுளு என, இருப்பது குறிப்பிடத்தக்கது. ஊழியர்கள் குஷியாக, நிம்மதியாக பணியாற்றுகின்றனர்.
- நமது நிருபர் -

