நகராமல் நங்கூரம் போல் நிற்கும் காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
நகராமல் நங்கூரம் போல் நிற்கும் காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
ADDED : டிச 19, 2024 10:56 AM

புதுடில்லி: 'தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது' என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடலில், நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். இதன் காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்கள், இதர மாவட்டங்களில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் டிச., 24ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும், ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.