வளர்ந்த இந்தியா உருவாக்க வளர்ந்த கேரளம் அவசியம்: மத்திய அமைச்சர் அமித் ஷா
வளர்ந்த இந்தியா உருவாக்க வளர்ந்த கேரளம் அவசியம்: மத்திய அமைச்சர் அமித் ஷா
UPDATED : பிப் 24, 2026 10:33 PM
ADDED : பிப் 24, 2026 09:49 PM

புதுடில்லி:கேரளாவின் பெயரை 'கேரளம்' என மாற்றுவது மாநிலத்தின் பாரம்பரியத்தை அதன் அசல் தன்மையுடன் வெளிப்படுத்தும், மேலும் அதன் பெருமையை உயர்த்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரவை இந்த பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அமித் ஷா பதிவிட்டுள்ளதாவது:
கேரள மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 24, 2024 அன்று கேரளா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் நடைபெறுகிறது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் 'கேரளம் (பெயர் மாற்றம்) மசோதா, 2026'-ஐ கொண்டு வரும். இது அரசியலமைப்பின் 3-வது பிரிவின் கீழ் ஜனாதிபதி பரிந்துரையுடன் செயல்படுத்தப்படும்.
ஒரு 'வளர்ந்த பாரதத்தை' உருவாக்க 'வளர்ந்த கேரளம்' அவசியம்.இதற்கு மூன்று முக்கியத் தூண்களாக தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, உற்பத்தித் துறைகளில் கவனம் செலுத்துதல்.உள்நாட்டு அச்சுறுத்தல்களைக் களைந்து பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல்.மத உணர்வுகளைப் பாதுகாத்தல் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களில் நடுநிலையான விசாரணையை உறுதி செய்தல் அவசியம்.
கேரள மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கேரளாவை 'கேரளம்' என்று பெயர் மாற்ற முடிவு செய்தது, மாநில மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
இவ்வாறு அமித் ஷா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

