குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் குஸ்தி: தம்பதி தகராறுக்கு நீதிமன்றத்தில் தீர்வு
குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் குஸ்தி: தம்பதி தகராறுக்கு நீதிமன்றத்தில் தீர்வு
ADDED : டிச 16, 2024 06:41 AM

மைசூரு: ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுவதில், தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னையை நீதிமன்றமே பெயர் சூட்டி தீர்த்து வைத்தது.
கர்நாடக மாநிலம், மைசூரு ஹுன்சூரில் வசிப்பவர் திவாகர். இவரது மனைவி அஸ்வினி. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு பெயர் சூட்டுவதில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
குழந்தைக்கு ஆதி என பெயர் சூட்ட திவாகர் விரும்பினார். அவரது மனைவி அஸ்வினியோ, வங்கிஷ் என பெயர் சூட்ட வேண்டும் என பிடிவாதம் பிடித்தார். இதனால், தம்பதி இடையே விரிசல் ஏற்பட்டது. அஸ்வினி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் கணவர் மீது, ஹுன்சூரின் எட்டாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் அஸ்வினி வழக்கு தொடர்ந்தார். 'நான் தேர்வு செய்த பெயரை குழந்தைக்கு சூட்டும்படி கணவருக்கு உத்தரவிட வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.
விசாரணை நடத்திய நீதிபதி கோவிந்தையா, 'குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் என்ன பிரச்னை? பெயரில் என்ன இருக்கிறது. குழந்தைக்கு நல்ல பண்பாடு, உயர் கல்வி தாருங்கள்' என, ஆலோசனை கூறினார்.
விசாரணையின் போது, அரசு உதவி வக்கீல் சவும்யா, குழந்தைக்கு ஆர்யவர்தன் என்ற பெயரை சிபாரிசு செய்தார்.
இதே பெயரை நீதிபதி கோவிந்தையா, நேற்று முன்தினம் அனைவரின் முன்னிலையில் குழந்தைக்கு சூட்டி, இனிப்பு ஊட்டினார். இதற்கு பெற்றோரும் சம்மதித்தனர்.