கடவுள் ராமர் ஆ.ராஜா பேச்சை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? அனுராக் தாக்கூர் கேள்வி
கடவுள் ராமர் ஆ.ராஜா பேச்சை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? அனுராக் தாக்கூர் கேள்வி
UPDATED : மார் 06, 2024 11:05 AM
ADDED : மார் 06, 2024 09:49 AM

ஷிம்லா: ‛‛ கடவுள் ராமர் குறித்த தி.மு.க., எம்.பி., ஆ.ராஜாவின் பேச்சை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?‛‛ என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஹிந்து மதத்தையும் கடவுளையும் அவதூறாக பேசும் வழக்கம் கொண்ட தி.மு.க., எம்.பி., ஆ.ராஜா இப்போது ஒரு படி மேலே சென்று, இந்தியா ஒரு நாடே இல்லை என்றும், ராமருக்கு தி.மு.க.,வினர் எதிரிகள் என்றும் பேசி பெரும் பிரச்னையை தூண்டியிருக்கிறார். ராஜாவின் பேச்சு நாடெங்கும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், பல முறை காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து சனாதன தர்மம், ஹிந்து மதம், கடவுள் ராமரை அவமானப்படுத்தி உள்ளனர். மறுபுறம் நாட்டை பிரிக்க நினைக்கும் கும்பல்களுடன் அவர்கள் சேர்ந்து செயல்படுகின்றனர். பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷத்தை எழுப்பி அந்நாட்டின் வெற்றியை கொண்டாடுகின்றனர்.
தற்போது பெரிய ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட நபர், அனைத்து எல்லைகளையும் தாண்டி விட்டார். காங்கிரசுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் அவர், இந்தியா, சனாதன தர்மம், கடவுள் ராமருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவரை பாதுகாப்பது யார் என்ற கேள்வியை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன்? திமுக, ஆ.ராஜா பேசியதை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தையும் அக்கட்சி ஏற்கிறதா? இந்தியாவை நாடாக காங்கிரஸ் கருதவில்லையா? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரிவினைவாத அரசியல் செய்வது ஏன்? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

