ADDED : ஜன 06, 2025 12:30 AM

புவனேஸ்வர்: ஒடிசாவில், கள ஆய்வுக்கு சென்ற முதல்வர் மோகன் சரண் மஜியை படம் எடுக்க அனுப்பப்பட்ட ட்ரோன், அவரின் காலருகே விழுந்து நொறுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள ஜார்சுகுடா மாவட்டத்தில், முதல்வர் மோகன் கடந்த 2ம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.
புருணஸ்பதி பகுதியில் உள்ள ஜாதேஸ்வர் கோவிலுக்கு அவர் சென்ற போது, தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்த, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானம், மோகன் காலடியில் திடீரென விழுந்து நொறுங்கியது.
இதைத் தொடர்ந்து சுதாரித்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், ட்ரோனை ஆய்வு செய்து அப்புறப்படுத்தினர்.
ஆய்வுக்கு வந்த முதல்வர் மற்றும் அதிகாரிகளை படம் எடுக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ட்ரோன், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது என, விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2ம் தேதி நடந்த இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியானதை அடுத்து தற்போது வெளிச்சத்துக்கு வந்தது.
பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே, இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.