பக்கத்து நாட்டை பதம் பார்க்க ஒரு 'ட்ரோன்' போதுமே! 'வாசிப்பும் அறிவியலும்... விஞ்ஞானிகளுடன் உரையாடல்'
பக்கத்து நாட்டை பதம் பார்க்க ஒரு 'ட்ரோன்' போதுமே! 'வாசிப்பும் அறிவியலும்... விஞ்ஞானிகளுடன் உரையாடல்'
ADDED : டிச 29, 2024 06:43 AM
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் நடத்தும் மூன்றாம் தமிழ் புத்தக திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.
நேற்று மதியம், அறிவியல் அரங்கத்தில் 'வாசிப்பும் அறிவியலும்... விஞ்ஞானிகளுடன் உரையாடல்' எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, விஞ்ஞானி டாக்டர் வீரமுத்துவேல், துளிர் நிறுவனர் டாக்டர் ஆனந்த் மேகலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், விஞ்ஞானிகளிடம் தங்கள் சந்தேகங்களை கேட்பதற்காக பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், பொது மக்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
அவர்களின் உரையாடல்களை பார்ப்போம்.
சேகர் -- 10 ம் வகுப்பு: இளைஞர்கள் படிப்பதற்கு புத்தக பரிந்துரை சொல்லுங்கள்?
மயில்சாமி அண்ணாதுரை: திருக்குறள், பாரதியார் கவிதைகள், பகவத் கீதை படிக்கலாம். பகவத் கீதையை, நான் தினமும் படிப்பேன். ஐம்பது ஆண்டுகளாக படித்து வருகிறேன்.
இனியா - 6 ம் வகுப்பு மாணவி: நிலவில் மனிதன் வாழ்வது நல்லதா? விண்வெளியில் உள்ள வேறு இடங்களில் வாழ்வது நல்லதா?
வீரமுத்துவேல்: பூமியிலிருந்து நிலவு 4 லட்சம் கி.மீ., துாரத்தில் உள்ளது. நாம் நிலவுக்கு செல்வது எளிது. விண்வெளியில் உள்ள மற்ற இடங்களில் சிறிது காலம் இருக்கலாம்; நீண்ட காலம் இருப்பது கடினம். நிரந்தரமாக செட்டில் ஆக நிலவே சிறந்த இடமாக இருக்கும். நிலவில் உள்ள மண்ணை வைத்து கட்டடம் கட்டுவது, அதற்கு ஏற்ற உபகரணங்களை எடுத்து செல்வது குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. சந்திரயான் - 4 க்கான திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.
கவனிக்கும் சக்தி
கிறிஸ்டோபர்: ஏலியன் இருக்கிறதா அல்லது உங்களை ஒரு சக்தி கவனிப்பதை எப்போதாவது உணர்ந்து உள்ளீர்களா?
மயில்சாமி அண்ணாதுரை: ஏலியன் என்பது இல்லை. நமது அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் பல உள்ளன. சில விஷயங்கள் இன்னும் நமக்கு தெரியாது. இத்தகைய விஷயங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம்.
டாக்டர் தேவி: ஹிமாலய எல்லை போன்ற குளிர் அதிகமாக உள்ள எல்லைப்பகுதிகளில், ராணுவ வீரர்கள் இல்லாமல் சாட்டிலைட், ட்ரோன் போன்றவை மட்டும் வைத்து அந்த பகுதியை கண்காணிக்க முடியுமா?
மயில்சாமி அண்ணாதுரை: பக்கத்து நாட்டிற்கு, இனி அபிநந்தன், எம்.16 ஐ அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது பிரச்னை என்றால், ஒரே சமயத்தில் 100 ட்ரோன்களை அனுப்ப முடியும். அதில் 99 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினாலும் கூட, ஒரே ஒரு ட்ரோன் இருந்தால் போதும்; எம்.16 ன் மொத்த வேலையை முழுமையாக செய்து விடும். ரஷ்யாவால் உக்ரைனை இன்னும் தோற்கடிக்க முடியவில்லை. இதற்கு காரணம், ஆள் இல்லா ராணுவம், ட்ரோன் தாக்குதலே.
தொழில் நுட்பங்கள்
வீரமுத்துவேல்: இந்த விஷயங்களில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். ஆனால், அது குறித்து என்னால் பொது வெளியில் கூற முடியாது. இந்தியாவிலும் இதற்கான தொழில் நுட்பங்கள் உள்ளன.
கேள்வி: பூமியில் உள்ள குப்பைகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுபோல விண்வெளியில் சேரும் குப்பைகளால் இயற்கைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா?
மயில்சாமி அண்ணாதுரை: செயற்கை கோள்களில் இரண்டு வகைகள் உள்ளன. பூமிக்கு அருகில் உள்ள செயற்கை கோள்கள் காலாவதி ஆகும் நேரத்தில் பூமிக்கு திரும்பிவரும் படி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பூமியிலிருந்து மிக தொலைவில் இருக்கக்கூடிய செயற்கை கோள்கள் தானாக எரிந்து சாம்பலாகி விடும் படி வடிவமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
நிலவில்
சக்தி பிரசாந்த் - மாணவர்: நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் இறங்கியது உண்மையா?
வீரமுத்துவேல்: அது உண்மை தான். யார் வேண்டுமானாலும் நிலவுக்கு செல்ல முடியும். சந்திரயான் - 3 மூலம் நிலவில் தரையிறங்கி விட்டோம். சந்திரயான் - 4 ல், நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்து சோதனை செய்ய உள்ளோம். அது வெற்றிகரமாக நடந்துவிட்டால், நாம் மனிதர்களை நிலவிற்கு அனுப்பலாம். 2040 ஐ இலக்காக வைத்து உள்ளோம். கேள்வி கேட்ட நீ கூட, நிலவில் கால் வைக்கும் முதல் இந்தியன் ஆக முடியும்.
அருள் முருகன் - புதுச்சேரி: விஞ்ஞானிகளாக வருவதற்கு மாணவியரை பெற்றோர் அனுமதிப்பதில்லையே. இது குறித்து உங்கள் கருத்து?
டாக்டர் ஆனந்த் மேகலிங்கம்: பெற்றோர், மாணவர்களிடம் சரியான விழிப்புணர்வு இருப்பதில்லை. பொது மக்கள், பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால், இந்நிலை கட்டாயம் மாறும்.
இட்லி, தோசை
சந்திரசேகர்: ஆன்மிகம், விஞ்ஞானம் என்பதற்கு நீங்கள் தரும் விளக்கம் என்ன?
மயில்சாமி அண்ணாதுரை: இட்லி, தோசை ஆகிய இரண்டும் ஒரே மாவில் செய்யப்படுகிறது. ஆனால், இரண்டும் வெவ்வெறு சுவையுடன் வித்தியாசமாக இருக்கும். இது தான் எனது பதில்.
மாணிக்கவேலு: இந்தியாவில் ஏன் 'ஏர் கிராப்ட்' உதிரி பாகங்களை நடுத்தர, சிறு, குறு தொழிற்சாலைகளில் செய்ய முடியவில்லை?
மயில்சாமி அண்ணாதுரை: இது ஒரு சாபக்கேடு என நினைக்கிறேன். செய்ய முடியாத காரியம் அல்ல. ஏதோ ஒன்று தடுத்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்தியாவில் தயாரிக்கும் காலம் வரும் என நம்புகிறேன்.
வாழ்க்கையை உயர்த்தும் தமிழ்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. கிட்டதட்ட 90 நிமிடங்கள் பேசி உள்ளேன். நான் கூறிய அனைத்தும் சரி என கூறவில்லை. அடுத்த தலை முறை தமிழை நோக்கி செல்ல வேண்டும். மாணவர்கள் தமிழில் கேள்வி கேட்டது, காதிற்கு இனிமையாக இருந்தது. இன்றைக்கு அனைவரும் இயல்பாக பேசி உள்ளோம். இங்குள்ள அனைவரும் தமிழால் இணைந்து உள்ளோம். புத்தக திருவிழாவை அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக செய்வதற்கு முயற்சிகள் செய்து வருகிறோம். தமிழைப் படியுங்கள்; தமிழைப் பேசுங்கள்; தமிழில் சிந்தியுங்கள்; தமிழ் உங்களை வாழ்க்கையை உயர்த்தும்.
- மயில்சாமி அண்ணாதுரை - நமது நிருபர் -

