தண்ணீர் இல்லாத கிராமத்துக்கு குடும்ப சண்டையால் தீர்வு
தண்ணீர் இல்லாத கிராமத்துக்கு குடும்ப சண்டையால் தீர்வு
ADDED : ஏப் 11, 2025 04:12 AM

போபால் : மத்திய பிரதேசத்தில், தண்ணீர் பஞ்சத்தால் மனைவி பிரிந்து சென்றதை கணவர் கண்ணீருடன் நிருபர்களிடம் சொன்னதை அடுத்து, பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு டின்டோரி மாவட்டத்தில் தேவ்ரா என்ற கிராமம் உள்ளது. இங்கு, 2,500 பேர் வசிக்கின்றனர். மாவட்ட தலைநகரில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் இருந்தாலும் இங்கு கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.
மொத்த கிராமமும் ஒரே ஒரு அடிபம்பை நம்பியே உள்ளது. இதனால், தண்ணீர் பிடிக்க எப்போதும் மக்கள் வரிசைகட்டி நிற்பது வாடிக்கை. அடிதடி சண்டைகளுக்கும் பஞ்சமில்லை. இதனால் வெறுத்துப்போன லட்சுமி சோனி என்ற பெண், தன் கணவர் ஜிதேந்திரா சோனியை விட்டு பிரிந்து, குழந்தைகளுடன் தாய்வீட்டுக்கு சென்றார்.
இதனால் மனம் உடைந்த ஜிதேந்திரா, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்து தன் மனைவி பிரிந்ததைக் கூறி கண்ணீர்விட்டு அழுதார். இது ஊடகங்களில் செய்தியானது. இதையடுத்து விழித்துக்கொண்ட மாவட்ட நிர்வாகம், தேவ்ரா கிராமத்துக்கு தண்ணீர் வசதி செய்யும் பணியை முடுக்கிவிட்டுள்ளது.
அருகில் உள்ள ஹன்ஸ் நகர் என்ற இடத்தில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தேவ்ரா கிராமத்துக்கு குழாய் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருவதாக கலெக்டர் தெரிவித்தார். ஜிதேந்திரா சோனியின் மனைவி எடுத்த அதிரடி முடிவு, அவரது கிராமத்தினரின் தண்ணீர் பஞ்சத்துக்கு தீர்வளித்துள்ளது.