தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சில வரிகள்: நவ. 13

சில வரிகள்: நவ. 13

சில வரிகள்: நவ. 13


ADDED : நவ 12, 2026 10:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2026 10:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதலீட்டு மோசடியில் ரூ.2 கோடி

இழந்த அமெரிக்க வாழ் இந்தியர்

திருவனந்தபுரம்: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் குன்னத்துநாட்டைச் சேர்ந்த 41 வயது நபர் அமெரிக்காவில் வசிக்கிறார். அவருக்கு, 'ஹேண்ட்டெக் மார்க்கெட்ஸ்' என்ற பெயரில் அன்னிய செலாவணி முதலீட்டுக்கான இணையதள இணைப்பு கிடைத்துள்ளது.

அதற்கு விருப்பம் தெரிவித்ததை அடுத்து, அது தொடர்பான, 'டெலிகிராம்' சமூக ஊடக குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு போலி வர்த்தக இணையதள இணைப்பை மோசடியாளர்கள் பகிர்ந்துள்ளனர். கடந்த 2025 அக்டோபர் முதல் பல தவணைகளில் 2.11 கோடி ரூபாயை அந்த தளத்தில் செலுத்தியுள்ளார். இரு மடங்கிற்கு மேல் லாபம் வந்ததாக இணையதளம் காட்டியுள்ளது.

பணத்தை திரும்ப பெற முயன்றபோது, முதலீட்டு தொகையும் லாபமும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் எர்ணாகுளம் இணைய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் சென்ற வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மலப்புரத்தில் மீண்டும்

‘ஷிகெல்லா’ தொற்று

மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் அரீக்கோடு, புல்பட்டா, எடவண்ணா ஆகிய மூன்று பகுதிகளில், ‘ஷிகெல்லா’ பாக்டீரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மலப்புரத்தில் இந்த ஆண்டு இதுவரை 75 பேர் ஷிகெல்லா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கழிவுநீர் கலந்த குடிநீர், சுகாதாரமற்ற உணவு வாயிலாக ஷிகெல்லா பரவும். குறிப்பாக இந்த பாக்டீரியா குழந்தைகளை எளிதில் பாதிக்கிறது. வயிற்றுப்போக்கு, ரத்தம் மற்றும் சீழுடன் மலம் வெளியேறுதல், காய்ச்சல், வாந்தி, வயிற்றுவலி ஆகியவை இதன் அறிகுறிகள்.

மலப்புரத்தில் மூன்று பகுதிகளில் மீண்டும் ஷிகெல்லா தொற்று கண்டறியப்பட்டதால் சுகாதாரம், உள்ளாட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் ஹோட்டல்கள், உணவு சேமிப்பு மையங்களில் ஆய்வு நடத்த உள்ளனர். குடிநீரை காய்ச்சி ஆறவைத்து குடிக்கவும் சுகாதாரமான உணவை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான கடத்தல் மிரட்டல்

விடுத்த பயணி பிடிபட்டார்

கொல்கட்டா: மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் இருந்து மும்பைக்கு, ‘ஏர் இந்தியா’ விமானம் நேற்று முன்தினம் காலை புறப்பட இருந்தது. விமானம் புறப்படுவதற்கு முன் அதன் கழிப்பறை கண்ணாடியில், ‘காலை 11:10 மணிக்கு விமானம் கடத்தப்படும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, விமானத்தில் இருந்த 105 பயணிகளும் கீழே இறக்கப்பட்டனர். விமானம் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது.

விசாரணையில் மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனால் காலை 10:30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், மாலை 5:38 மணிக்கு மும்பை புறப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர், விமானத்தில் இருந்த பயணி என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

4.9 ரிக்டர் அளவில்

சிக்கிமில் நிலநடுக்கம்

கேங்டாக்: வடகிழக்கு மாநிலமான சிக்கிம் – நேபாள எல்லைப் பகுதியில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், சிக்கம் தலைநகர் கேங்டாக், மேற்கு சிக்கிம் மற்றும் கிழக்கு சிக்கிமின் சில பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி மேற்கு சிக்கிமின் கியால்ஷிங் மாவட்டத்தில் உள்ள யுக்சோமுக்கு வடமேற்கே 40 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. மேலும், பூமிக்கு அடியில் 73 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us