ஆம்புலன்சுக்கு வழி விடாதவருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்
ஆம்புலன்சுக்கு வழி விடாதவருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்
ADDED : நவ 19, 2024 12:37 AM

திருச்சூர்: கேரளாவில், 1 கி.மீ., துாரத்துக்கு மேலாக ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்ற கார் உரிமையாளரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்த போலீசார், அவருக்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பொன்னானியில் இருந்து நோயாளி மற்றும் அவரின் உறவினர்களை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ், திருச்சூர் மருத்துவக் கல்லுாரிக்கு நேற்று முன்தினம் விரைந்தது.
சாலக்குடி வழியாக ஆம்புலன்ஸ் சென்ற போது, முன்னால் சென்ற மாருதி சுசூகி கார், அதற்கு வழிவிடாமல் சென்றது. தொடர்ந்து ஹாரனை எழுப்பியபடி சென்றபோதும், ஆம்புலன்சுக்கு வழிவிடாத கார் உரிமையாளர், படுவேகமாக அதை இயக்கினார்.
பலமுறை முயன்றபோதும், ஆம்புலன்ஸ் முந்திச் செல்லாதபடி வளைத்து வளைத்து காரை இயக்கிய நபர், 1 கி.மீ., துாரத்துக்கு வழிவிடாதபடி சென்றார். ஒரு கட்டத்தில் அந்த காரை, ஆம்புலன்ஸ் முந்தியது.
இந்த காட்சிகள் அனைத்தும் ஆம்புலன்சில் இருந்த கேமராவில் பதிவாகின.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானதை அடுத்து, கார் உரிமையாளரை கண்டுபிடித்த போலீசார், அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தனர்.
சாலையில் காரை வேகமாக ஓட்டுதல், அவசர சேவைக்கு வழிவிடாமல் செய்தல், பணி செய்வதை தவிர்த்தல் போன்ற காரணங்களுக்காகவும், காருக்கான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாததற்காகவும், அவருக்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.