கோவிலுக்குள் சென்றவர்களுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிப்பு
கோவிலுக்குள் சென்றவர்களுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிப்பு
ADDED : டிச 20, 2024 05:52 AM

சிக்கமகளூ: ஹனுமன் கோவிலுக்குள் குறிப்பிட்ட சமூகத்தினர் சென்றதால், அவர்களுக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சிக்கமகளூரு மாவட்டம், கடூரின் பி.கொடிஹள்ளி கிராமத்தில் 160 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில், கணிசமான அளவில் குறிப்பிட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர். நவ., 10ல், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மஞ்சப்பா குடும்பத்தினர், இங்குள்ள ஹனுமன் கோவிலுக்குள் சென்றனர்.
இதையறிந்த மற்றொரு சமூகத்தினர், அச்சமூகத்தினரை அழைத்து, 'கோவிலுக்குள் சென்றது குற்றம். கோவில் முழுதும் சுத்தம் செய்ய வேண்டும். எனவே, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இல்லையெனில், கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்' என எச்சரித்தனர்.
இது தொடர்பாக, கடூர் தாசில்தாரிடம், மஞ்சப்பா புகார் செய்தார். ஆனால், இதுவரை அரசு அதிகாரிகள் ஒருவர் கூட இந்த கிராமத்திற்கு வந்து விசாரிக்கவில்லை. 'சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும், இன்னும் தீண்டாமை மட்டும் ஒழியவில்லை' என, மஞ்சப்பா தரப்பினர் அதிருப்தி தெரிவித்தனர்.