ADDED : பிப் 12, 2024 06:43 AM
பெங்களூரு: போக்குவரத்து விதியை 300 முறை மீறியவருக்கு, 3.20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இன்னும் செலுத்தாததால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய, போலீசார் தயாராகி வருகின்றனர்.
பெங்களூரு, சுதாமநகரில் வசிப்பவர் வெங்கடராமன், 45. இவர் ஸ்கூட்டர் வைத்துள்ளார்.
ஸ்கூட்டரில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் அணியாமல் சென்றது, சிக்னலில் நிற்காமல் செல்வது, மொபைல் போனில் பேசியபடி ஸ்கூட்டர் ஓட்டுவது என போக்குவரத்து விதிகளை மீறி உள்ளார்.
சமீபத்தில் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினார். ஸ்கூட்டரின் வாகன பதிவெண்ணை சரிபார்த்த போது, வெங்கடராமன் 300 முறை போக்குவரத்து விதியை மீறியது தெரிந்தது.
இதற்காக, அவருக்கு 3.20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடராமன், 'அபராத தொகையில் மூன்று புது ஸ்கூட்டர்கள் வாங்கி விடுவேன். இந்த ஸ்கூட்டரை நீங்களே வைத்து கொள்ளுங்கள்' என்று கூறி உள்ளார்.
இதை ஏற்க மறுத்த போலீசார், அபராத தொகையை கட்டும்படி கூறி உள்ளனர். ஆனாலும் அவர் இன்னும் செலுத்தவில்லை. இதனால், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.