ADDED : செப் 19, 2024 08:26 PM
வசீர்பூர்:வடமேற்கு டில்லியின் வாசிர்பூர் தொழில்துறை பகுதியில் டெம்போ மோதியதில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உதம் சிங் பூங்கா அருகே வசித்தவர் சுர்ஜித். இவரது ஐந்து வயது மகன் கார்த்திக். அசோக் விஹார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு தொழிற்சாலையில் சுர்ஜித் வேலை செய்கிறார்.
நேற்று முன் தினம் தந்தையுடன் கார்த்திக் தொழிற்சாலைப் பகுதிக்கு வந்திருந்தான்.
தொழிற்சாலையில் சுர்ஜித் வேலையில் மும்முரமாக இருந்தபோது, சிறுவன் சாலையை கடக்க முயன்றுள்ளான். அப்போது வேகமாக வந்த டெம்போ, சிறுவன் மீது மோதியது.
படுகாயமடைந்த சிறுவன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
சுர்ஜித் அளித்த புகாரின்பேரில் டெம்போ ஓட்டுனர் நீரஜை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.
இந்த விபத்து குறித்த வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.