ம.பி.,யில் மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையம் பிப்ரவரி மாதம் சோதனை ஓட்டம் நடத்த திட்டம்
ம.பி.,யில் மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையம் பிப்ரவரி மாதம் சோதனை ஓட்டம் நடத்த திட்டம்
ADDED : பிப் 04, 2024 01:26 AM

உலகிலேயே தண்ணீரில் மிதக்கும் மிகப்பெரிய சூரிய சக்தி மின் நிலையம், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக 278 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான பணிகளை நிறைவு செய்து, அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் மின் உற்பத்தி, வணிக ரீதியான செயல்பாட்டிற்கு வர உள்ளது.
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும், மின் தேவை அதிகரித்து வருகிறது. தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல், மின் உற்பத்தி செய்யவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு, மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
முதல் கட்ட பணி
எனவே, அனைத்து மாநிலங்களும், காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைப்பதில், ஆர்வம் காட்டி வருகின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தில், மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 3,950 கோடி ரூபாய் செலவில், உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது.
அங்குள்ள காந்த்வா மாவட்டத்தில், நர்மதா நதியில் கட்டப்பட்டுள்ள, ஓம்காரேஸ்வரர் அணையில், 3,000 ஏக்கர் பரப்பளவில், மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது.
இதில், 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக, 278 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் துவக்கப்பட்டு, முடியும் நிலையில் உள்ளன.
இத்திட்டத்தை அம்மாநிலத்தின் பொதுத்துறை நிறுவனமான நர்மதா ஹைட்ரோ எலக்ட்ரிக் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்; ஹிமாச்சல் அரசின் பொதுத்துறை நிறுவனமான, எஸ்.ஜே.வி.என்., எனப்படும் சட்லஜ் ஜல் வித்யுத் நிகம் நிறுவனம்; ஆம்ப் இந்தியா நிறுவனம் ஆகியவை செயல்படுத்துகின்றன.
இந்நிறுவனங்கள் 'எல் அண்ட் டி' உட்பட வேறு சில துணை நிறுவனங்கள் உதவியுடன், முதல் கட்டப் பணிகளை துவக்கி முடிக்கும் நிலையில் உள்ளன.
முதல் கட்டமாக உற்பத்தி செய்யப்படும், 278 மெகாவாட் மின்சாரத்தை, வீடுகளுக்கு வினியோகம் செய்வதற்காக, இரண்டு துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டத்தில், 322 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.2,000 கோடி
இது குறித்து, மத்தியப் பிரதேசம் எரிசக்தி மேம்பாட்டு கழகம் மேலாண் இயக்குனர் கணேஷ்சங்கர் மிஸ்ரா கூறியதாவது:
ஓம்காரேஸ்வரர் அணையில், சூரிய சக்தி மின் திட்டம், 2021 ஆக., 4ல் துவக்கப்பட்டது. முதல் கட்ட பணிகள், 2,000 கோடி ரூபாயில் துவக்கப்பட்டு, நிறைவடையும் நிலையில் உள்ளன.
மின் தகடுகள் பொருத்தும் பணியை, தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து, மக்களுக்கு வினியோகிக்க எடுத்து செல்வதற்கான, உள்கட்டமைப்பு பணிகளை, மத்திய பிரதேச அரசு மேற்கொள்கிறது.
இதற்கான செலவில், 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது.
ஓம்காரேஸ்வரர் அணையில், சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நிறைவடைந்த பின், அவற்றை பார்க்க சுற்றுலாப் பயணியரை அனுமதிக்கவும் திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐந்து மெகாவாட்
திட்ட மேலாளர் ராகவேந்திரா கூறியதாவது:
ஓம்காரேஸ்வரர் அணையில், 'சோலார் பேனல்கள்' எனப்படும் சூரிய சக்தி மின்தகடுகள், தண்ணீர் மீது மிதக்க விடப்பட்டுள்ளன.
அதில் உற்பத்தியாகும் மின்சாரம், மிதக்கும் மின் மாற்றிக்கு எடுத்து செல்லப்பட்டு, துணை மின் நிலையத்திற்கு அனுப்பப்படும்.
இத்திட்டத்தில், 1 யூனிட் மின் உற்பத்திக்கு, 3 ரூபாய் 21 பைசா செலவாகிறது.
மிதக்கும் மின் மாற்றிகள், 160 டன் கொண்டவையாக உருவாக்கப்படுகின்றன. இவை பெரோ சிமென்டில் கட்டப்படுகின்றன.
ஐந்து மற்றும் 10 மெகாவாட் திறன் கொண்ட, மிதக்கும் மின் மாற்றிகள் உருவாக்கப்பட்டு, சோலார் பேனல்கள் உள்ள இடத்தில் மிதக்க விடப்படுகின்றன.
மின் மாற்றியில் பழுது ஏற்பட்டால், படகில் கரைக்கு இழுந்து வந்து, அதை சரி செய்ய முடியும்.
ஐந்து மெகாவாட் மின் உற்பத்திக்கு, 13,000 சோலார் பேனல்கள் மிதக்க விடப்படுகின்றன. ஒரு பேனல் விலை 15,000 ரூபாய்.
முதல் கட்டத்தில் அமைக்கப்படும், சோலார் பேனல்கள், அதிகபட்சமாக 300 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
--- நமது நிருபர் -