கஞ்சாவுக்கு அடிமையான மகன் கொலை செய்ய துடிக்கும் தாய்
கஞ்சாவுக்கு அடிமையான மகன் கொலை செய்ய துடிக்கும் தாய்
ADDED : நவ 11, 2024 05:18 AM

துமகூரு: 'என் மகனை சிறையில் போடுங்கள். அல்லது அவனை கொலை செய்ய அனுமதி தாருங்கள்' என ஒரு தாய், போலீசாரிடம் கண்ணீர் விடுகிறார்.
துமகூரு, துருவகெரேவில் வசிப்பவர் ரேணுகம்மா, 45. இவர் சிறிய ஹோட்டல் வைத்து, பிழைப்பு நடத்துகிறார். இவரது மகன் அபிஷேக், 25. இவர், கஞ்சா போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர். இவரால் தாய் ரேணுகம்மா, பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்.
தினமும் கஞ்சா போதையில், அக்கம், பக்கத்தினர், சாலையில் செல்வோரை வம்புக்கு இழுக்கிறார். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார். இதனால் பொது மக்களிடம் உதை வாங்குகிறார். இவரால் பாதிக்கப்பட்டோர், ரேணுகம்மாவிடம், மகனை அடக்கி வைக்கும்படி திட்டுகின்றனர்.
பல முறை தாய் புத்திமதி கூறியும், அபிஷேக் திருந்தவில்லை. இதனால் மனம் நொந்துள்ள ரேணுகம்மா, போலீசாரிடம், 'என் மகனை கைது செய்து சிறையில் போடுங்கள். இல்லாவிட்டால் நானே விஷம் வைத்து அவனை கொலை செய்ய, அனுமதி தாருங்கள்.
'இளம் பெண்களை சீண்டி அடி வாங்குகிறான். மக்கள் என் வீட்டு முன் வந்து, தகராறு செய்கின்றனர். கஞ்சா பழக்கத்தால் என் மகன் பாழாகி விட்டான்' என மன்றாடுகிறார்.